”ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை" - ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்

நிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தில் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் டிசம்பர் 6ம் தேதி முதல் இன்று வரை ஆர்பிஐயின் நிதிக் கொள்கைக் குழு கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், வங்கிகளுக்கு வழங்கப்படும் கடன்களுக்கு விதிக்கப்படும் ரெப்போ ரேட் எனப்படும் வட்டி விகிதத்தில் எந்தவிதமான மாற்றமும் செய்யபடவில்லை என்று கூறினார். 6 உறுப்பினர்களை கொண்ட நிதி கொள்கை கூட்ட குழுவில் 5 பேர் வட்டி விகித உயர்வுக்கு எதிராக வாக்களித்ததால் இந்த முறையும் ஏற்கனவே இருந்த 6.5 சதவிகிதம் என்ற நிலையிலேயே தொடரும் என அறிவித்தார்.

இதையும் படிக்க : ”அரசு குறித்து குறை சொல்வதை விடுத்து மக்களை காப்பாற்றுவோம்” - கமல்ஹாசன்

இதன் விளைவாக நிலையான வைப்புத் தொகைக்கு வழங்கப்படும் வட்டி 6.25 சதவிகிதமாகவும், வங்கிகள் விதிக்கும் வட்டி 6.75 சதவீதமாகவும் இருக்கும் என்றும் கூறினார்.

இதன்மூலம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த நிதிக் கொள்கைக் கூட்டத்தில், 2023 பிப்ரவரி மாதத்தில் இருந்து தொடர்ந்து 5வது முறையாக வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், ஆர்பிஐயின் இந்த முடிவால், வங்கிகளில் வீட்டுக்கடன் உள்ளிட்ட கடன் வாங்கிய வாடிக்கையாளர்கள் பலரும் நிம்மதி அடைந்துள்ளனர்.