விநாயகர் சதுர்த்தியையொட்டி கோயில் முன்பு நடைபெற்ற ஏராளமான திருமணங்கள்...

விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோயில் முன்பு ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன.

விநாயகர் சதுர்த்தியையொட்டி கோயில் முன்பு நடைபெற்ற ஏராளமான திருமணங்கள்...

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் கோயில் முன்பு ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன. பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டதால், கோயில் முன்பு எளிமையான முறையில் பல திருமணங்கள் நடைபெற்றன. நெருங்கிய உறவினர்களுடன் மட்டும் வந்து, மணமக்கள் மாலையை மாற்றி கொண்டு, தாலி கட்டி கொண்டனர்.

இதேபோல் கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் பகுதியிலும் கோயில் முன்பு பல திருமணங்கள் நடைபெற்றன. ஆவணி மாத இறுதி முகூர்த்த நாள் என்பதால், 100-க்கும் மேற்பட்ட திருமண ஜோடிகள் கோயில் வளாகத்தில் குவிந்தனர். அப்பகுதியை சுற்றியுள்ள மண்டபங்களிலும் திருமணங்கள் நடைபெற்றதால், சாலையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கொரோனா நோய் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாமல்,  அரங்கேறிய திருமணங்களால், வைரஸ் பரவல் சூழல்  உருவாகியுள்ளது..

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மரகதவல்லி தாயார் சமேத மதனகோபால சுவாமி கோயில் வளாகத்தில், ஒரே நேரத்தில் 13 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட உறவினர்கள் பங்கேற்ற நிலையில், பெரும்பாலானோர் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் காணப்பட்டனர்.