பள்ளி வாகனங்களின் தரம் குறித்த சோதனை...தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்ட ஆட்சியர்கள்!

பள்ளி வாகனங்களின் தரம் குறித்த சோதனை...தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்ட ஆட்சியர்கள்!

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் பள்ளி வாகனங்களின் தரம் குறித்த சோதனை நடைபெற்றது. 

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பள்ளி திறப்புக்கு முன்னதாக தனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து ஆய்வு செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள 69 தனியாா் பள்ளி பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் ஷர்வண்குமார் உள்ளிட்ட அதிகாாிகள் ஆய்வு செய்தனர். அப்போது பேருந்தின் தரம் குறித்து சோதனை நடத்திய அதிகாரிகள் குறைபாடுகள் உள்ள 12 பேருந்துகளுக்கு நோட்டீஸ் வழங்கினர்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆட்டோ நகர் பகுதியில் அமைந்துள்ள திறந்தவெளி மைதானத்தில் 250-க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சியர் வளர்மதி  ஆய்வு செய்தாா். தொடா்ந்து ஓட்டுநர்களுக்கு வாகனங்களில் விபத்து ஏற்படும் நேரங்களில் பிரச்னைகளை கையாள்வது குறித்து ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதையும் படிக்க : 4-வது வாரமாக நடைபெற்ற HAPPY STREET நிகழ்ச்சி... உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்த பொதுமக்கள்!

இதேபோல் விழுப்புரம் மாவட்டம் பெருந்திட்ட வளாக மைதானத்தில் மாவட்ட ஆட்சியா் பழனி தனியாா் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தாா். இதில் 270 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. தொடா்ந்து ஓட்டுநர்களுக்கு கண் பரிசோதனை உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டது. 

திருவள்ளூர் மாவட்டம் பஞ்செட்டியில் உள்ள மைதானத்தில் பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா தலைமையில் பள்ளி வாகனங்களை சிறப்பு தணிக்கை குழுவினா் ஆய்வு செய்தனர்.  இதில் 208 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு குறைபாடுகள் கண்டறியப்பட்ட 30 வாகனங்களின் தகுதி சான்று ரத்து செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டன. மேலும் ஓட்டுநா்கள் சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது. இதில் 130 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் வாகனங்களை ஆய்வு செய்த நிலையில், முறையாக பராமரிக்கப்படாத 15 வாகனங்களை தகுதி நீக்கம் செய்தார்.