"நீதிமன்ற அவமதிப்பை சந்திக்க நேரிடும்" டிஜிபி-ஐ எச்சரிக்கும் ஆர்.எஸ்.எஸ் வழக்கறிஞர்!

நீலகிரி மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்க தவறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும என ஆர் எஸ் எஸ் தரப்பு வழக்கறிஞர்கள் தமிழக உள்துறை செயலாளர், டிஜிபி, எஸ்.பி.எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

நாட்டின் 76வது சுதந்திர தினம், விஜய தசமி, அம்பேத்கர் பிறந்த நாள் ஆகியவற்றை முன்னிட்டு அக்டோபர் 22 மற்றும் 29ம் தேதிகளில் தமிழகத்தின் 33 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த  அனுமதி வழங்க காவல்துறைக்கு கோரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாவட்ட நிர்வாகிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், அணிவகுப்பு நடத்த அரசியல் சாசனம் அனுமதி அளித்துள்ள நிலையில் அதற்கு தடை விதிக்க முடியாது என, 33 இடங்களில் உரிய நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க வேண்டுமென காவல்துறைக்கு அக்டோபர் 16ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

அக்டோபர் 22ம் தேதி அணிவகுப்புக்கான வழித்தடத்தை 20ம் தேதிக்குள்ளும், 29ம் தேதி பேரணிக்கான வழித்தடத்தை ஐந்து நாட்களுக்கு முன்னதாகவும் இறுதி செய்து விண்ணப்பிக்க வேண்டுமென ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கும் உத்தரவிட்டிருந்தது.

இதன்படி நீலகிரி மாவட்டம் பந்தலூரில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி மனு கொடுப்பதற்காக மாவட்ட நிர்வாகி ஆர்.தியாகராஜன் என்பவர் தமிழக டிஜிபி-யை சந்திக்க அக்டோபர் 19ஆம் தேதி சென்றபோது சந்திக்க மறுத்ததுடன், நீதிமன்ற உத்தரவு நகலை கேட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆர்.தியாகராஜன் தரப்பு வழக்கறிஞர் ரபு மனோகர் மற்றும் P.பழனிநாதன் ஆகியோர் தமிழக உள்துறை செயலாளர் அமுதா, தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், நீலகிரி மாவட்ட எஸ்.பி. சுந்தர வடிவேல், எருமாடு காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கர் ஆகியோருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

அந்த நோட்டீசில் அக்டோபர் 16ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தபோது அரசு தலைமை வழக்கறிஞரும், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் இருந்த நிலையில், அந்த உத்தரவு குறித்து டிஜிபி கவனத்தில் கொள்ளாதது, அக்டோபர் 19ஆம் தேதியன்று தங்களிடம் உத்தரவு நகலை பெற்ற பிறகே தெரிந்துகொண்டது, அதன்பின்னரும் நீதிமன்ற உத்தரவின்படி அனுமதி அளிக்காததது ஆகியவை நீதிமன்ற உத்தரவை மீறும் செயல் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே நீதிமன்ற உத்தரவை மதிக்கும் வகையில் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. தவறினால் நால்வருக்கு எதிராகவும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வழக்கறிஞர் நோட்டீசில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: மருதுபாண்டியர்களின் நினைவிடத்தில் தென் மண்டல ஐ.ஜி. ஆய்வு!