தமிழகத்தை மிரட்டும் மழை... இயல்பு வாழ்க்கை பாதிப்பு... குளங்களாக மாறிய முக்கியப் பகுதிகள்...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 
தமிழகத்தை மிரட்டும் மழை... இயல்பு வாழ்க்கை பாதிப்பு... குளங்களாக மாறிய முக்கியப் பகுதிகள்...

சென்னையில் கடந்த 2 நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக, நகரின் முக்கியப் பகுதிகள் குளங்களாக மாறியுள்ளதுடன் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். 

மந்தைவெளி செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள வி.சி தோட்டம் பகுதியில் கடந்த 2 நாட்களாக மழைநீர் தேங்கியுள்ள நிலையில் மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாததைக் கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீரை அகற்றினர்

இதேபோல் செங்குன்றம் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்ட நிலையில், தண்ணீர் கால்வாய் வழியாக செல்லாமல் ஊருக்குள் புகுந்தது. இதனால் செங்குன்றம் பகுதியில் வசித்து வரும் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஆரணியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தரைப்பாலம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. பிச்சாட்டூர் அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டதால், ஆரணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதன் காரணமாக காரணி, நெல்வாய், புதுப்பாளையம், மங்களம், எருக்குவாய் உள்ளிட்ட 10 கிராம மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு சுமார் 10 கிலோ மீட்டர் சுற்றிச் செல்ல வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது. 

திருவாரூர் மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக 17 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவிலான சம்பா, தாளடி நெற்பயிர்களும், 2 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவிலான குறுவை பயிரும் பாதிக்கப்பட்டுள்ளன. வயல்களில் இருந்து மழைநீர் வடிந்த போதிலும், தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்த நிலையில், பாதிப்பு குறித்து வேளாண்துறை சார்பில் கணக்கெடுப்பு பணி நடைப்பெற்று வருகிறது

இதனிடையே கர்நாடகாவின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டியுள்ளது. மேலும் முக்கொம்பு அணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் திருச்சி மாவட்டத்தில் கொள்ளிடம் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com