60 இடங்களில் நடந்த ரெய்டில் ரூ.13.08 லட்சம், முக்கிய ஆவணங்கள் பறிமுதல்....

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீடு மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் 13.08 லட்சம் ரூபாய் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

60 இடங்களில் நடந்த ரெய்டில் ரூ.13.08 லட்சம், முக்கிய ஆவணங்கள் பறிமுதல்....

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக தி.மு.க. சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.  அதிமுகவினர் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து  தமிழக ஆளுனரிடம் ஆதாரங்களின் பட்டியல்  வழங்கப்பட்டதுடன்  திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த முறைகேடுகள் பற்றி உரிய விசாரணை நடத்தப்படும் என்று மு..க.ஸ்டாலின்  தெரிவித்திருந்தார்.. 

திமுக ஆட்சிப்பொறுப்பேற்று 100 நாட்களை எட்ட உள்ள நிலையில்   கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. மேலும் பல மாஜிக்களின்  வீடுகளிலும் சோதனை நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் இன்று  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு உள்பட 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று  அதிரடியாக  சோதனையில் ஈடுபட்டனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி வேலுமணி, உள்ளாட்சித்துறையின் 811 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்களை தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டும் வழங்கியதாகவும், இதில்  பல கோடி ரூபாய் ஊழல் செய்தது  கண்டுபிடிக்கப்பட்டதே ரெய்டுக்கு காரணமாகும். எஸ்பி வேலுமணி அவரது   உறவினர்கள்,நண்பர்கள் என 17 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ள லஞ்ச ஒழிப்பு போலிசார், 60 இடங்களில் சோதனை நடத்தினர். 

கோவை குனியமுத்தூரில் உள்ள எஸ்பி வேலுமணி வீடு , அவருடைய சகோதர் எஸ்பி அன்பரசனின் வீடு மற்றும் காந்திபுரத்திலுள்ள அன்பரசனுக்கு சொந்தமான  ஸ்ரீ மகா கணபதி ஜிவல்லர்சில் ரெய்டு நடைபெற்றது. இந்த தகவலை அறிந்த அதிமுகவினர் வேலுமணியின் வீட்டின் முன்பு குவிந்து  லஞ்ச ஒழிப்பு  போலீசாருக்கு  எதிராக முழக்கமிட்டதால்  பெரும் பரபரப்பு  நிலவியது. ஆயிரக்கணக்கான அதிமுகவினர் திரண்டதால்  அவர்களை கட்டுப்படுத்த முடியாமல்  காவல்துறையினர் திணறினர். 

இந்த நிலையில்  மாலை 6 மணிக்கு  எஸ்பி வேலுமணியின் சுகுனாபுரம் வீட்டில்  லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவடைந்தது. சுமார் 12 மணி நேரம் நீடித்த  இந்த சோதனையில்  எந்த ஆவணமும் கைப்பற்றப்படவில்லை என அதிமுகவினர் தரப்பில்  தெரிவிக்கப்பட்டது. மேலும் கோவையில்  உள்ள ஆலயம் அறக்கட்டளை அலுவலகம், மதுக்கரை சண்முக ராஜா வீடு என கோவையில் மட்டும் 35 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஒட்டன்சத்திரம் சின்னக்காம்பட்டி புதூர் பகுதியிலுள்ள கோவை முன்னாள் வருவாய் அலுவலர் மதுராந்தகி வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் மட்டும் 15 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.   சென்னை சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் வைத்து எஸ்.பி வேலுமணியிடமும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை நடத்தி பல்வேறு விவரங்களை சேகரித்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த அதிமுக நிர்வாகிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும்  வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால்  பரபரப்பு நிலவியது.

இதேபோல திண்டுக்கல், காஞ்சிபுரத்தில் 6 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் டெண்டர் விட்டதில் முறைகேடு நடந்தது உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பாக ஏராளமான ஆவணங்கள் மற்றும் கணினிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.