கருக்கலைப்பு செய்த மருத்துவர், புகைப்படம் எடுத்த உதவியாளர் பரணி!! மணியின் அந்தரங்க விவகாரத்தில் சிக்கியவர்களுக்கும் சம்மன்

முன்னாள்  அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது புகார் அளித்த நடிகைக்கு கருக்கலைப்பு செய்த மருத்துவருக்கு சம்மன் அனுப்ப காவல் துறையினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கருக்கலைப்பு செய்த மருத்துவர், புகைப்படம் எடுத்த உதவியாளர் பரணி!! மணியின் அந்தரங்க விவகாரத்தில் சிக்கியவர்களுக்கும் சம்மன்

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 28 ஆம் தேதி மலேசியப் பெண் நடிகை சாந்தினி புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் கடந்த 5 வருடமாக முன்னாள் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை காட்டி தன்னை மோசடி செய்ததாக தெரிவித்திருந்தார். மூன்று முறை கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார். 

மேலும் அந்தரங்க புகைப்படங்களை எடுத்து மிரட்டல் விடுத்ததாகவும், பாலியல் வன்முறை செய்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார். இதையடுத்து இந்த வழக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டு அடையாறு அனைத்து மகளிர் காவல் துறையினர் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான புகாரை விசாரித்து 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். குறிப்பாக கட்டாயக் கருக்கலைப்பு செய்தல், பாலியல் பலாத்காரம் ,பாலியல் வன்முறை,நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 6 பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் இருக்கும் சொந்த ஊரான ராமநாதபுரத்தில் அவர் இருக்கும் இடங்களிலும் காவல் துறையினர் அவரை தேடும் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க தலைமறைவாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அமைச்சர் பதவியில் இருந்த மணிகண்டன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிற காரணத்தினால், அவர் மீது போடப்பட்டிருக்கும் ஒவ்வொரு பிரிவுக்கும் தேவையான தகுந்த ஆதாரங்களை தீவிரமாக காவல் துறையினர் தேடி வருகின்றனர். நடிகை சாந்தினிக்கு கட்டாய கருக்கலைப்பு செய்த மருத்துவர் யார் என்பதை காவல் துறையினர் கண்டறிந்து அவருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

பாலியல் பலாத்கார புகார் கொடுக்கப்பட்டிருப்பதால் நடிகை சாந்தினிக்கு மருத்துவப் பரிசோதனை செய்யவும் காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர். அதே நேரத்தில் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் அடிப்படையில் நடிகை சாந்தினி முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக கொடுத்த வாட்ஸ்அப் ஆடியோ வீடியோ புகைப்பட ஆதாரங்களை சைபர் கிரைம் காவல் துறையினர் ஆய்வுக்கு உட்படுத்தி வருகின்றனர். 

இவ்வாறாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது போடப்பட்ட ஒவ்வொரு சட்டப்பிரிவு தொடர்பாகவும் உறுதியான ஆதாரங்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த உறுதியான ஆதாரங்களை அடிப்படையாக வைத்துதான் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியுமென காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு  நடிகை சாந்தினி அறிமுகம் செய்து வைத்து நடிகை சாந்தினி மற்றும் குடும்பத்தாருக்கும் மிரட்டல் விடுத்த அமைச்சரின் உதவியாளர் பரணி என்பவரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.