"எல்லாேருக்கும். எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே ஒற்றை இலக்கு" மு.க.ஸ்டாலின் உறுதி!

தமிழ்நாட்டில் பசிப்பிணி மற்றும் அறிவுப் பசியை போக்கி, எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். 

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரியில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில், குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது, தனது அரசியல் பயணத்திற்கு உந்து சக்தியாக காஞ்சி மாநகரம் அமைந்ததாக பெருமிதம் தெரிவித்தார். சுய மரியாதை, சமத்துவம், சமூக நீதிக்கான சுடரை ஏந்தி தனது அரசியல் பயணத்தை தொடங்கியதாக கூறிய அவர், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தொடங்கி வைத்தது தம் வாழ்நாளில் கிடைத்த பெரும் பாக்கியம் என்றார்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற இரண்டரை ஆண்டுகளில் இலவச பேருந்து திட்டம், காலை உணவு திட்டம், புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் என பல்வேறு மகத்தான திட்டங்களை செயல்படுத்தியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். இதற்கெல்லாம் மகுடம் சூட்டும் வகையில், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தொடங்கி வைப்பதில் பெருமை அடைவதாகவும் முதலமைச்சர் மகிழ்ச்சி தெரிவித்தார். பேரறிஞர் அண்ணா, கலைஞரிடம் கற்ற பாடத்தின் அடிப்படையில் இந்த உன்னத திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

மதத்தின் பெயராலும், ஆதிக்க சக்திகளின் செயல்பாடுகளும் கடந்த காலங்களில் பெண்கள் அடக்கி வைக்கப்பட்டதாக குறிப்பிட்ட முதலமைச்சர், பழமைவாத சிந்தனை கொண்டவர்களால் பெண்கள் சந்தித்த அவலங்களை பட்டியலிட்டார். தாயின் கருணை, மனைவியின் உறுதுணை மற்றும் மகளின் பேரண்பு கிடைக்கப்பெறும் போதுதான் உயர்வு கைவரப் பெறும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார். தனது தாயார் தயாளு அம்மாள் தன்னிடம் காட்டிய அன்பு, கனிவு உள்ளிட்டவை குறித்து நெகிழ்ச்சி தெரிவித்த முதலமைச்சர்,  இதேபோல், தான் மிசாவில் ஓராண்டு சிறையில் இருந்தபோது தனக்கு உறுதுணையாக இருந்தவர் தனது மனைவி துர்கா என்ற முதலமைச்சர், அன்பின் வடிவமாக திகழ்பவர் என்றார். மேலும், எந்தவிதமான அரசியல் பின்னணியும் இல்லாத அவர், முதலமைச்சரின் மனைவி என்பதை கடந்து சாதாரண குடும்பத் தலைவியாக வலம் வருகிறார் என்று கூறினார்.

உள்ளாட்சி மட்டுமல்லாமல் அனைத்து அரசியல் தளங்களிலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிய கலைஞர் கருணாநிதி, மகளிர் நலன் காத்த மாண்பாளர் என பெருமிதம் தெரிவித்தார். இலவச எரிவாயு இணைப்பு, இலவச கல்வி, ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரையில் பெண் ஆசிரியர்கள் நியமனம், கலப்பு திருமண உதவித் திட்டம் என கலைஞர் கொண்டு வந்த மகளிர் நலன் சார்ந்த திட்டங்களை எடுத்துரைத்தார்.

இந்த திட்டங்களுக்கு எல்லாம் மகுடம் சூட்டும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட முதலமைச்சர், இது மகளிர் உரிமைத் தொகை அல்ல, உங்கள் உழைப்புக்கான அங்கீகாரமாக வழங்கப்படுகிறது என விழாவுக்கு வந்திருந்த பெண்களை பார்த்து கூறினார். முதியோர் ஓய்வூதியம் மற்றும் அமைப்பு சாரா ஓய்வூதியம் பெறுவோரின் ஓய்வூதியத்தை ஆயிரத்து 500 ரூபாயாக உயர்ந்தி உள்ளதாக அவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசின் இந்த திட்டங்கள் மூலம் ஒரு கோடியே 45 லட்சம் குடும்பத்தினர் பயன்பெற்று வருவதாக குறிப்பிட்ட முதலமைச்சர், இந்தியாகே முன்னோடியான இந்த திட்டங்களை மற்ற மாநிலங்கள் செயல்படுத்த முனைப்பு காட்டுவதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

மற்ற மாநில முதலமைச்சர்கள் நமது திட்டங்கள் குறித்து ஆர்வடன் கேட்டறிகின்றனர் என கூறிய அவர், பசிப்பிணி, அறிவுப்பசியை போக்கி வருவதாகவும், எல்லாரக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என திறம்பட செயல்படுத்தி வருகிறோம் கனவுகளை நிறைவேற்றும் ஆட்சி இது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com