காங்கிரஸாரின் தொடர் போராட்டத்தால் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பு...!

காங்கிரஸாரின் தொடர் போராட்டத்தால் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பு...!

ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ரயில் மறியல் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட முயன்ற நிலையில், அவர்களை போலீசார் கைது செய்தனர்.

காங்கிரஸ் கட்சியின் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் அப்துல் கனி ராஜா தலைமையில், கொடை ரோட்டில் ரயில் நிலையம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் திரண்டு ரயிலை மறிக்க முயன்றனர். அப்போது அங்கிருந்த போலீசார் 100க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

இதேப்போன்று நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சியினர்,  நாகர்கோவில் - கச்சிகுடா விரைவு வண்டியில் பயணம் செய்து அபாய சங்கிலியை இழுத்ததால் 30 நிமிடம் ரயில் தாமதமாக புறப்பட்டு சென்றது. மேலும், ரயில் நிலையம் முன்பு குவிந்திருந்த காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

இதனையடுத்து புதுக்கோட்டையில் ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை கண்டித்து ரயில் மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

இதையும் படிக்க : அண்ணாமலை ஊழல் பட்டியலை தனிப்பட்ட முறையில் வெளியிட்டாரா? பாஜக கட்சி தலைவராக வெளியிட்டாரா?

இதேப்போல் கரூர் மாவட்டம் குளித்தலை வட்டார காங்கிரஸ் கட்சியினர் ஈடுபடுவதற்காக குளித்தலை பஜனை மடத்திலிருந்து ரயில் நிலையம் வரை மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை முழக்கமிட்டுவாறு சென்று மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கிருந்த போலீசார் அனைவரையும் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கடம்பூர் ரயில் நிலையத்தில், ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்து  தனியார் திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர்.