மருமகள் நகைகளை திருடி விட்டு கரடி திருடர்கள் என நாடகமாடிய மாமியார்......விசாரணையில் அம்பலம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மருமகள் நகைகளை திருடி விட்டு கரடி திருடர்கள் என மாமியார் நாடகமாடியது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.

மருமகள் நகைகளை திருடி விட்டு கரடி திருடர்கள் என நாடகமாடிய மாமியார்......விசாரணையில் அம்பலம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள ஆவுடையம்மாள்புரம் பகுதியை சேர்ந்த மாடசாமி என்பவரது மனைவி பார்வதியம்மாள். மாடசாமி இறந்து விட பார்வதியம்மாள் தனது மகன் ராமகிருஷ்ணன், மருமகள் இசக்கியம்மாள் ஆகியோருடன் வசித்து வருகின்றனர்.

ராமகிருஷ்ணனுக்கு மாதேஷ்(7), கன்ஷீகா (3) என்ற 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் 12-ம் தேதி நள்ளிரவில் சிறுநீர் கழிக்க பார்வதியம்மாள் வெளியே சென்ற போது, கரடி வேடமணிந்த 2 பேர் தன் வாயில் துணியை வைத்ததாகவும், இதன் பின்னர் அவருக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என்றும், கண்விழித்து பார்த்த போது வீட்டின் அருகே உள்ள மற்றொரு வீட்டின் துணியில் கயிறுடன் கட்டப்பட்டு பார்வதியம்மாள் இருந்ததாக தெரிகிறது.

இதையெடுத்து பார்வதியம்மாள், தனது நைட்டி பையில் வைத்திருந்த செல்போன் மூலமாக அருகில் வசிக்கும் தனது சகோதிரி மகள் கணபதியை அழைத்துள்ளார். அவர் வந்து பார்த்த போது தனது சித்தி கயிறினால் கட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, வீட்டில் இருந்த அரிவாளை கொண்டு அதை அறுத்து ஏறிந்து விட்டு, பார்வதியம்மாளை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

மேலும் வீட்டில் தூக்கி கொண்டு இருந்த பார்வதியம்மாள், மகன் மற்றும் மருமகளை எழுப்பி அவர் கயிறு கட்டப்பட்டு இருந்தததை கூறியுள்ளார். அப்போது அரை மயக்கத்தில் இருந்ததாக கூறப்படும் பார்வதியம்மாள் தனது மருமகளிடம் 2 பீரோவில் உள்ள நகைகள் மற்றும் வீட்டில் பொருள்கள் இருக்கிறதா என்று பார்க்க சொல்லியுள்ளார். அவரது மருமகள் இசக்கியம்மாள் 2 பீரோவினையும் பார்த்த போது, ஒரு பீரோவில் இருந்த இசக்கியம்மாளின் 6 பவுன் நகையை காணமால் போய் இருந்ததும், மற்றொரு பீரோவில் இருந்த பார்வதியம்மாளின் நகை அப்படியே இருப்பதும் தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சிடையந்த பார்வதியம்மாள் மகன், மருமகள் இருவரும் நாலாட்டின்புதூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தது மட்டுமின்றி சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கும் அழைத்துச்சென்றுள்ளனர். இதையெடுத்து மாவட்ட எஸ்பி.ஜெயக்குமார் உத்தரவின் பெயரில், டி.எஸ்.பி. உதயசூரியன் மேற்பார்வையில் நாலாட்டின்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவதி தலைமையிலான போலீசார் ஆவுடையம்மாள்புரத்திற்கு சென்று பார்வதியம்மாள் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

பார்வதியம்மாளிடன் விசாரணை நடத்திய போது அவரின் முன்னுக்கு பின் கூறிய பதில்கள் போலீசாருக்கு சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்த போது, ஊருக்குள் புதியதாக யாரூம் வரவில்லை என்பது தெரியவந்துள்ளது.

ஒன்று உள்ளுரை சேர்ந்தவர்கள் எடுத்து இருக்க வேண்டும் அல்லது பார்வதியம்மாள் நாடகம் ஆட வேண்டும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினர். மேலும் திருடர்கள் வந்த வழி குறித்து பார்வதியம்மாள் கொடுத்த தகவலின் படி அப்பகுதியில் சென்று போலீசார் சோதனை செய்த போது, அங்குள்ள முட்புதரில் ஒரு தாளில் நகைகள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

நகைகளை கைப்பற்றிய போலீசார் மீண்டும் பார்வதியம்மாளிடம் விசாரணை நடத்திய போது, அவரே நகைகளை எடுத்து மறைத்து வைத்து விட்டு, கரடி வேடமணிந்த திருடர்கள் வந்தார்கள் என்று நாடகமாடியது அம்பலமானது.

தொடர்ந்து போலீசார் பார்வதியம்மாளிடம் விசாரணை நடத்தியதில், பார்வதியம்மாளின் தம்பி வரதராஜ் என்பவர் அவரின் வீட்டின் அருகே குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். வரதராஜ் குடும்பத்தில் சிலருக்கு உடல்நிலை சரியில்லமால் சிகிச்சை எடுத்துவந்ததாகவும், வரதராஜ் குடும்பம் மிகவும் கஷ்ப்பட்டு வந்ததாகவும் தெரிகிறது.

தனது குடும்ப கஷ்டம் குறித்து வரதராஜ் தனது அக்கா பார்வதியம்மாளிடம் கூறியுள்ளார். இதையெடுத்து பார்வதியம்மாள் வீட்டில் உள்ள நகைகளை எடுத்து தருவதாகவும், அதை வைத்து குடும்ப கஷ்டத்தினை தீர்த்து கொள்ளுமாறு தனது தம்பியிடம் கூறியுள்ளார்.

மேலும் மருமகளிடம் கேட்டால் தரமாட்டாள் என்றும், ஆகையால் நகையை எடுத்து ஒளித்து வைத்துக்கொண்டு திருடு போய்விட்டது என்று கூறிவிடலாம் என்றும், இதனால் யாரூக்கும் சந்தேகம் வாரது என்றும், இது தவிர காவல் நிலையத்தில் புகார் அளித்தால் குறைந்த நகை என்பதால் போலீசார் எப்படியாவது வேறு நகையை கொடுத்து விடுவார்கள், அதை மருமகளுக்கு கொடுத்து விடுவோம் என்று பார்வதியம்மாள் கூறியுள்ளார்.

நகை காணமால் போனது பற்றி யாரூக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக தான் இந்த கரடி திருடர்கள் நாடகத்தினை அக்கா, தம்பி இருவரும் அரங்கேற்றியுள்ளது தெரியவந்துள்ளது. நகைகளை மீட்ட போலீசார் பார்வதியம்மாள் மற்றும் வரதராஜனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.