தேனியில் பயங்கரம்- காப்பகத்தில் தங்கியிருந்த மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன்...

தேனியில் காப்பகத்தில் இரு குழந்தைகளுடன் தங்கியிருந்த மனைவியை அரிவாளால் வெட்டிய கணவனை போலீசார் கைது செய்தனர்.

தேனியில் பயங்கரம்- காப்பகத்தில் தங்கியிருந்த மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன்...

கள்ளகுறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் துரைப்பாண்டியன். லாரி ஓட்டுநரான இவருக்கு உமாமகேஷ்வரி என்ற பெண்ணுடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணத்தால் கணவரை பிரிந்த மனைவி உமாமகேஷ்வரி தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள தனது சகோதரியின் வீட்டில் தங்கியுள்ளார்.

மேலும் தன்னை கணவர் அடித்து துன்புறுத்துவதாக தேனி மாவட்ட சமூக நலத்துறை மற்றும் ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் உமாமகேஷ்வரி புகார் அளித்ததாக கூறப்படுகிறது. புகாரின்பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். 

பின்னர் தேனி அருகே உள்ள கொடுவிலார்ப்பட்டியில் உள்ள தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான காப்பகத்தில் இரு குழந்தைகளுடன் உமாமகேஸ்வரி தங்க வைக்கப்பட்டார்.  இந்நிலையில் இன்று அதிகாலை காப்பகத்தின் சுவர் ஏறி குதித்த உமாமகேஷ்வரியின் கணவர், மனைவியிடம் சண்டை  போட்டுள்ளார்.

சத்தம் கேட்டு காப்பகத்தின் காவலர் அரிவாளுடன் சென்றுள்ளார். அப்போது துரைப்பாண்டியன் காவலரின் கையில் இருந்த அரிவாளை பிடுங்கி மனைவி உமாமகேஷ்வரியை சரமாரியாக வெட்டி அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட உமா மகேஸ்வரி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு மிகவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் கொண்டு செல்லப்பட்டார்.  இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் தப்பியோடிய துரைப்பாண்டியனை தேனியில்  சுற்றி வளைத்து கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.