கல்வி மாவட்டங்களை ரத்து செய்த திமுக...தர்ணாவில் இறங்கிய ஆர்.பி.உதயகுமார்!

கல்வி மாவட்டங்களை ரத்து செய்த திமுக...தர்ணாவில் இறங்கிய ஆர்.பி.உதயகுமார்!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திருமங்கலம், உசிலம்பட்டி கல்வி மாவட்டங்களை ரத்து செய்துள்ளதாக ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். 

திருமங்கலம், உசிலம்பட்டி கல்வி மாவட்டங்கள் உருவாக்கம்:

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நிர்வாக வசதிக்காகவும், தேர்ச்சி விகிதம் அதிகரிப்பதற்கும்  உசிலம்பட்டி  மற்றும் திருமங்கலம் என கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. ஆனால், தற்போது ஆட்சியில் இருக்கும் திமுக அரசு கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி அதிமுக கொண்டு வந்த உசிலம்பட்டி - திருமங்கலம் கல்வி மாவட்டங்களை மீண்டும் ஒரே கல்வி மாவட்டமாக மாற்றி அரசாணை பிறப்பித்தது.

எதிர்க்கும் அதிமுகவினர்:

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய கல்வி மாவட்டங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை மீண்டும் செயல்படுத்தக்கோரியும், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில், 50க்கும் மேற்பட்ட அதிமுகவினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுடன் காவல் துறையினர்  பேச்சு வார்த்தை நடத்தி, அவர்களை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகரை சந்திக்க அழைத்து சென்றனர். தொடர்ந்து, போராட்டக்காரர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். 

ஆர்.பி.உதயகுமார் பேச்சு:

மனு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.உதயகுமார், "அதிமுக ஆட்சி காலத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நிர்வாக வசதிக்காக 52 புதிய கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது.  இந்த கல்வி மாவட்டங்கள் திட்டத்தால் மாணவர்களுக்கு 14 வகையான நலத்திட்ட உதவிகள் விரைவாக வழங்கப்பட்டது. அதேபோன்று, மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய இடங்களில் இருந்த கல்வி மாவட்டங்கள் மீண்டும் ஒன்றாக மாற்றியமைக்கப்பட்டது. இதன்மூலம் தேர்ச்சி  விகிதம் அதிகரித்ததாகவும் கூறினார். 

இதையும் படிக்க: அதிமுக ஆட்சியில் அடித்த ஷாக்...ஸ்டாலினுக்கு இப்போ அடிக்கவில்லையா?

அதிமுகவின் திட்டங்களை ரத்து செய்யும் திமுக:

தொடர்ந்து பேசிய அவர், அதிமுக ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட புதிய கல்வி மாவட்டங்கள், தாலிக்கு தங்கம், குடிமராமத்து திட்டம், பச்சிளம் குழந்தைகள் பரிசு பெட்டகம் உள்ளிட்ட திட்டங்களை ஒவ்வொன்றாக திமுக அரசு ரத்து செய்து வருவதாக குற்றம் சாட்டினார். 

சிற்றுண்டி திட்டம்: 

அதேபோன்று, அதிமுக ஆட்சி காலத்தில் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் தொடங்கிய காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது திறந்து வைத்து உள்ளார். 

அடுத்தகட்ட போராட்டம்:

அதிமுக ஆட்சியில் கொண்டு வந்தது போல புதிய கல்வி மாவட்டங்கள் செயல்படவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். திமுக அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டினார்.