தடையை மீறி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நடத்துவோம்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு...

தமிழக அரசின் தடையை மீறி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நடத்துவோம் என்று பாஜக  மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தடையை மீறி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நடத்துவோம்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு...

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பாவூர்சத்திரத்தில் நடைபெற்ற பாஜக ஊழியர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அண்ணாமலை,  தமிழகத்தில் பாஜக கட்சியானது நல்ல வளர்ச்சி அடைந்து வருவதாகவும் தொண்டர்கள் அனைவரும் உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகும் வண்ணம் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தமிழகத்தின் பாரம்பரியத்தையும் மண்ணின் பெருமைக்கும் எதிராக திமுக அரசு அரசியல் செய்து வருவதாகவும், கொரோனா தற்போது குறைந்து விட்டதாக கூறி அரசு மதுபான கடைகளையும், பள்ளிக்கூடங்களிலும் திறக்க அனுமதி வழங்கி விட்டு விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதித்திருப்பதை கடுமையாக விமர்சித்தார்.

தமிழக பாஜகவின் சார்பில் தடையை மீறி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நடத்துவோம் என்று கூறினார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் வரும் பத்தாம் தேதி பாஜக சார்பில் மிகப்பெரிய விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தப்படும் என்றும் கூறினார். இதற்கு உடனடியாக கூட்டத்தில் கலந்துகொண்ட பாஜக ஊழியர்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாக ஆரவாரம் செய்தனர்.

 விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களை ஒப்பிட்டு பேசுகையில் ஆந்திராவில் கொரோனா தொற்று  அதிகரித்ததன் காரணமாக பாஜக ஆட்சி செய்து வந்தாலும் ஊர்வலத்திற்கு தடை விதித்துள்ளதாகவும் ஆனால் இதே மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி செய்யும் அரசு அனுமதி வழங்கியுள்ளது என்பதை சுட்டிக்காட்டினார்.