ஒன்றிய அரசு என்று அழைத்தால் வழக்கு தொடருவோம்.! தமிழக பாஜக மிரட்டல்.!

மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பது குறித்து தேவைப்பட்டால் பாஜக சார்பில் வழக்கு தொடுப்போம் என பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்
சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் பாஜகவின் மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் "தமிழகத்தில் மீதமுள்ள உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் போது தேர்தலில் போட்டியிடுவது குறித்து செயற்குழுவில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மத்தியில் எல்லா கட்சி கூட்டணியிலும் ஆட்சியில் இருந்த திமுக, இப்போது ஏதோ புதிதாக கண்டுபிடித்தது போல் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று சொல்கிறார்கள். ஒன்றிய அரசு என்று சொல்வதால் தமிழகத்திற்கு ஏதேனும் நன்மை இருக்கிறதா? பெருமை இருக்கிறதா ? ஒன்றிய அரசு என்பது மக்களை திசை திருப்பும் முயற்சி. ஒன்றிய அரசு என தமிழக அரசு அழைப்பது குறித்து பாஜக சார்பில் தேவைப்பட்டால் வழக்கு தொடுப்போம்" எனக் கூறினார்.
மேலும் "நிதியமைச்சர் குழப்பமான ஒரு அமைச்சராக இருக்கிறார். கற்பனையில் பேசி வருகிறார். பெட்ரோல் மீதான வரியில் 32.90 ரூபாயை மத்திய அரசு எடுத்து கொள்கிறது என்று அப்பட்டமான ஒரு பொய்யை நிதியமைச்சர் கூறுகிறார். பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றினால் அதை தமிழக பாஜக ஆதரிக்கும்" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் "அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற சட்டம் ஏற்கனவே இருக்கிறது. இப்போது ஏதோ புதிதாக கொண்டு வருவது போல் திமுக செயல்படுகிறது. எல்லா சமுதாயத்திலும் அவர்கள் வழிபாடு படத்தும் இடத்தில் உள்ள கோவில்களில் அதே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான் அர்ச்சகராக இருக்கிறார்கள்" என தெரிவித்தார்.