கே.பி.முனுசாமி, ஜெயக்குமார் போன்றோர் இருக்கும் வரை அதிமுக அழிவை எதிர்நோக்கும் - சசிகலாவிற்கு ஆதரவாக அதிமுக பிரமுகர் அறிக்கை!

கே.பி.முனுசாமி, ஜெயக்குமார் போன்றோர் இருக்கும் வரை அதிமுக அழிவை எதிர்நோக்கும் - சசிகலாவிற்கு ஆதரவாக அதிமுக பிரமுகர் அறிக்கை!

தற்போதைய அரசியல் களத்தை பரபரப்பாகியிருக்கும் ஒரு சம்பவம் என்ன என்றால் அது சசிகலா தொண்டர்களிடம் பேசிய ஆடியோ வெளியானது தான். இந்த ஆடியோ வெளியானதும் அதிமுக கூடாரம் கலகலத்துள்ளது. அதைத் தொடர்ந்து அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி சசிகலாவை விமர்சித்து காட்டமாக பேசியிருந்தார்.

இதனால் கே.பி.முனுசாமியை கண்டித்து சசிகலா ஆதரவாளர்கள் பலர் காட்டமாக பேசி இருந்தார்கள். அதைப் தொடர்ந்து முனுசாமியை விமர்சித்து இராமநாதபுரம் மாவட்டம் அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளரும்  தற்போதைய  மாநில எம்.ஜி.ஆர்.கழக துணைச் செயலாளருமான சோமாத்தூர் சுப்பிரமணியம்  வெளியிட்ட கண்டன அறிக்கை வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த அறிக்கையில் "புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி கட்டிக்காத்த அதிமுகவை இரட்டை தலைமையின் கீழ் கொண்டு சென்று ஆளுங்கட்சியாக இருந்த மாபெரும் இயக்கத்தை எதிர்க்கட்சியாக மாற்றிய பெருமை கொண்ட தகுதியற்ற அமைச்சர்கள், தகுதியற்ற சட்டமன்ற உறுப்பினர்கள், தொண்டர்களை அரவணைத்து செல்ல முடியாத மாவட்ட செயலாளர்கள், பணம் மட்டுமே சம்பாதிக்க கட்சியில் உள்ள ஒன்றிய செயலாளர்களை உடன் வைத்துக்கொண்டு கழகத் துணை ஒருங்கிணைப்பாளர் என்று கூறி கொண்டு இந்த மாபெரும் இயக்கத்தை அழித்திட  கே.பி. முனுசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி. சண்முகம் போன்றோர் இருக்கும் வரை அதிமுக அழிவை எதிர்நோக்கும்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நான்கு தொகுதிகளிலும் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. பரமக்குடி தொகுதியை பொறுத்தவரை எப்பொழுதும் அதிமுக கோட்டையாக இருந்து வந்தது அதனை பெரும் ஓட்டையாக மாற்றிவிட்டார் தோல்வியடைந்த எம்எல்ஏ சதன் பிரபாகர்.  இதற்கெல்லாம் காரணம் மேல் மட்டத்தில் உள்ளவர்கள் செல்வாக்கை பயன்படுத்தி சீட்டு வாங்கிக் கொள்கிறார்கள்.

எல்லோரையும் அரவணைத்து கொண்டு செல்லாத காரணத்தால் தென்மாவட்டங்களில் தோல்வியடைந்து வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம் அதை வைத்து ஆட்சி ஆள முடியாது கட்சியை மட்டும் காப்பாற்றலாம்.

கட்சியை வைத்து அவர்களுக்கு லாபம் சம்பாதிக்கலாம் தவிர மாநிலத்தில் இருக்கின்ற தொண்டர்களை காப்பாற்ற முடியாது. ஆகையால் கழகத் தொண்டர்கள் அனைவரும் இணைந்து அதிமுக இயக்கத்தை மீட்டு தியாகத் தலைவி சின்னம்மாவின் தலைமையின் கீழ் கட்சி ஒன்றுபட்டு ஒற்றை  தலைமையின் கீழ் கொண்டு செல்ல வேண்டுமென்று தொண்டர்களின் விருப்பமாக உள்ளது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.