காவிரி விவாரம்; "அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்" அன்புமணி வலியுறுத்தல்!

காவிரி நீர் விவகாரத்தில் தீர்வை காண உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.   

பாட்டாளி மக்கள் கட்சி வாக்குச்சாவடி களப்பணியாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். 

அவர் பேசுகையில், கர்நாடக அரசு காவிரி நீரை வழங்க திட்ட வட்டமாக மறுத்துள்ளது. "உச்ச நீதி மன்ற தீர்ப்பு வந்தாலும் அதனை நாங்கள் மதிக்க மாட்டோம்" என கர்நாடக முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் பேட்டி அளித்துள்ளனர். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இது இந்தியாவின் இறையாண்மை மற்றும் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான ஒரு செயல் என தெரிவித்தார்.

காவிரி பிரச்சினை தொடர்பாக 1924 ல் மதராஸ் ராஜதானிக்கும் மைசூர் ராஜ்ஜியத்திற்கும் போடப்பட்ட ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் படி காவிரி ஆற்றின் குறுக்கே மெட்ராஸ் ராஜதானியின் அனுமதி இல்லாமல் அணைகளை கட்டக் கூடாது. அந்த ஒப்பந்தம் இப்போதும் நிலுவையில் உள்ளது. அதன் பிறகு காவிரி நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பை இந்த விவகாரத்தில் வழங்கியுள்ளது. அதில் ஒரு ஆண்டிற்கு 177 டிஎம்சி தண்ணீரை விட வேண்டும் என்றும், ஒவ்வொரு மாதத்திற்கும் இவ்வளவு தண்ணீர் வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை உச்ச நீதி மன்றமும் உறுதி செய்துள்ளது. இதையெல்லாம் கடந்து தண்ணீர் விட மாட்டோம் என்று கர்நாடக அரசு சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. மத்திய அரசு இதில் தலையிட வேண்டும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கடந்த 10 நாட்களில் கர்நாடக அரசு 2 அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தியுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் கடந்த 6 மாத காலத்தில் காவிரி சம்பந்தமாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படவில்லை. எனவே உடனடியாக தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என வலியுறுத்தினார். 

மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். கிட்டத்திட்ட 2 லட்சம் ஏக்கர் குருவை சாகுபடி கறுகிக்கொண்டிருக்கிறது. இதனை  எடுத்துச்சொல்லி காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்த வேண்டும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை தமிழ்நாட்டில் போதுமான அளவு பொழியவில்லை. இன்னும் சில நாட்களில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்க உள்ளது. அதற்குள் நமக்கு தண்ணீர் வேண்டும். அதை விடுத்து உச்ச நீதிமன்றம் சென்றால்  21 ஆம் தேதி தான் வழக்கு விசாரணைக்கு வரும். இதற்கு இன்னும் 10 நாட்கள் நிலுவையில் உள்ளன. இந்த 10 நாட்கள் தண்ணீர் இல்லை என்றால் பயிர்கள் கருகிவிடும் என வேதனையுடன் தெரிவித்தார். 

எனவே, தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும், தமிழ்நாடு முதலமைச்சர் கர்நாடக முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை  நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

இதையும் படிக்க: நடிகர்கள் சிம்பு, தனுஷ் -க்கு ரெட் கார்ட் கொடுத்த தயாரிப்பாளர் சங்கம்..!