நடிகர் சூர்யாவை கண்டித்து பாஜக தீர்மானம்..! நீட் தேர்வு, ஒளிப்பதிவு திருத்தச் சட்ட வரைவை எதிர்த்ததால் ஆவேசம்.! 

நடிகர் சூர்யாவை கண்டித்து பாஜக தீர்மானம்..! நீட் தேர்வு, ஒளிப்பதிவு திருத்தச் சட்ட வரைவை எதிர்த்ததால் ஆவேசம்.! 

நீட் தேர்வு, ஒளிப்பதிவு திருத்தச் சட்ட வரைவுக்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகர் சூர்யாவை கண்டித்து பாஜக இளைஞரணி செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

பாரதிய ஜனதா கட்சியின்  மாநில இளைஞரணி செயற்குழு கூட்டம் சென்னை தியாகராயநகரில் கட்சி தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்றது. பாஜக மாநில இளைஞரணி செயலாளர் வினோஜ் செல்வம் தலைமையில்  நடைபெற்ற இந்த செயற்குழு கூட்டத்தில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன . 

பாஜக இளைஞரணி  நிறைவேற்றிய தீர்மானங்கள்; 

1)ஆளுநர் உரையின் மீதான விவாதத்தில் ஜெய்ஹிந்த் எனும் வார்த்தையை இழிவுபடுத்திய திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரனை கண்டித்து தீர்மானம். 

2)நீட் தேர்வு குறித்து தொடர்ந்து உண்மைக்கு புறம்பாக பேசி வரும் நடிகர் சூர்யா , மோடி அரசின் மக்கள் நல திட்டம் , சட்டங்களை உள்நோக்கத்துடன் சுய விளம்பரத்திற்காக தொடர்ந்து எதிர்த்து வருகிறார். படைப்பாளிகளின் உரிமையை பாதுகாக்கும் ' ஒளிப்பதிவு திருத்தச் சட்ட வரைவு 2021 'க்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சூர்யாவிற்கு கண்டனம்.சூர்யா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தால்  பாஜக இளைஞரணி மூலம் சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  

3)நீட் தேர்வு குறித்து தமிழக மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் ஸ்டாலின் அரசை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. 

4)கோயில் நிலங்களை மீட்க தமிழக முதலமைச்சர் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

5)கொரோனா இரண்டாவது அலையை வெற்றிகரமாக எதிர்கொண்ட பிரதமர் மோடி அவர்களுக்கு மனப்பூர்வமாக பாராட்டுகள்.

6)நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் உடனடியாக திறக்க வேண்டும். 

7)திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்த பெட்ரோல் டீசல் விலை குறைப்பு , சமையல் எரிவாயு மானியம் , குடும்பத் தலைவிகளுக்குகு மாத ஊதியம் உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.