தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, நாகை, மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெற்று, 16-ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெறும் என்றும், இதனால், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும் என்றும் தெரிவித்தார்.
அத்துடன், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிதாக ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால்
நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.
சென்னையில், பரவலாக மிதமான மழை பெய்யும் என்றும், ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் கூறினார். தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் இலங்கை கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என பாலசந்திரன் எச்சரித்துள்ளார்.