சிவகங்கையில் 10 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்கள் கிராமபள்ளி மாணவர்களுக்கு வழங்கல்....

சிவகங்கையில் 10 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்கள் கிராமபள்ளி மாணவர்களுக்கு வழங்கல்....

மேலையான்பட்டி கிராமம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மேலையான்பட்டி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச புத்தக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய மேலையான்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் 85 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு சிவகங்கையில் நடைபெற்ற இரண்டாவது புத்தக கண்காட்சி விழாவில் இருந்து சுமார் ரூபாய் 10,000 மதிப்புள்ள புத்தகங்களை, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஒன்றிய கவுன்சிலர் சகாதேவன், ஊராட்சி மன்ற தலைவர் நவநீதகிருஷ்ணன்  உள்ளிட்டோர் இணைந்து விலைக்கு வாங்கி பள்ளிக்கூடத்திற்கு இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் சிட்டு வரவேற்புரை நிகழ்த்தினார். மாணவர்களும் தங்களுக்கு இலவசமாக புத்தகங்கள் வழங்க வந்த சிறப்பு அழைப்பாளர்களை நடனமாடியும், கல்வி மற்றும் நூல்கள் பற்றி சிறப்புரையாற்றியும் வரவேற்றனர்.  இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஒன்றிய கவுன்சிலர் சகாதேவன் மாணவர்களுக்கு புத்தகம் வழங்கி சிறப்பித்தார். அப்போது பாட புத்தகங்கள் மட்டுமல்லாமல் நூலகத்திற்கு சென்று பல்வேறு புத்தகங்களையும் மாணவர்கள் பயில வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

பின்பு ஒரு வருட காலத்திற்குள் பள்ளிக்கு ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வாங்கித் தருவதாகவும் உறுதி அளித்தார். பிராமணம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் நவநீதகிருஷ்ணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளையராஜா உள்ளிட்டோரும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கினர்.

தினமும் 2 மணிநேரம் புத்தகவாசிப்பு

மாணவர்களை சிந்திக்க வைக்கும் புதிர் கணக்குகள், பகுத்தறிவை வளர்க்கும் கதைகள், மாணவர்கள் பேச்சாற்றலை வளர்ப்பது எப்படி, ஆங்கில வினைச்சொல், காலங்கள், தமிழ் - ஆங்கில அகராதி, புராணக் கதைகள், தேசதலைவர்களின் வரலாற்று புத்தகங்கள், அறிவியல் வினா விடைகள், பொது அறிவு களஞ்சியம் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கினர். ஒவ்வொரு வகுப்பு மாணவர்களும் வரிசையாக வந்து சிறப்பு அழைப்பாளர்களிடம் புத்தகங்களை பெற்றுச் சென்றனர். தினமும் குறைந்தது இரண்டு மணி நேரமாவது இதுபோன்ற புத்தகங்களையும் பயில வேண்டும் என நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு அழைப்பாளர்கள் மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com