ஸ்டாலின் ஆட்சியை குறை சொல்ல எடப்பாடிக்கு தகுதியில்லை - ஓ.பி.எஸ் ஆதரவாளர் புகழேந்தி காட்டம்!

ஸ்டாலின் ஆட்சியை குறை சொல்ல எடப்பாடிக்கு தகுதியில்லை - ஓ.பி.எஸ் ஆதரவாளர் புகழேந்தி காட்டம்!

ஸ்டாலின் ஆட்சியை குறை சொல்ல எடப்பாடி பழனிசாமிக்கு எந்த தகுதியும் கிடையாது என அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி சாடியுள்ளார். இன்று சென்னை மெரினா கடற்கரையில் செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி, உயர்நீதிமன்ற தீர்ப்பில் உள்ள குறைகளை உச்சநீதிமன்றத்ததில் சுட்டிக் காட்டி வெற்றி பெறுவோம் என்றும் புகழேந்தி கூறியுள்ளார். 

சீல் அகற்றக்கோரிய வழக்கில் ஈ.பி.எஸ் தரப்புக்கு சாதகமாக தீர்ப்பு:

ஜூலை 11 ஆம் தேதி வைக்கப்பட்ட  சீலை அகற்றக்கோரிய வழக்கில் நேற்று ஈ.பி.எஸ் க்கு சாதகமாக தீர்ப்பு முடிந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அதிமுக அலுவலக சீலை அகற்றி, சாவியை ஈ.பி.எஸ் தரப்பிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

இன்று செய்தியாளர்களை சந்தித்தார் புகழேந்தி:

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்பு ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இன்று என்னுடைய பிறந்தநாள். எப்போதும் பிறந்த நாள் என்றால் மறைந்த அம்மா ஜெயலலிதாவிடம் ஆசி பெறுவது வழக்கம். அப்படி தான் கடந்த  25 ஆண்டுகளாக வாழ்த்து பெற்று வருகிறேன். அதன்படி பிறந்தநாளான இன்று ஜெயலலிதாவிடம் வாழ்த்து பெற வேண்டும் என நினைவிடம் வந்து மரியாதை செலுத்தியதாக கூறினார்.

நேற்றைய தீர்ப்பு:

தொடர்ந்து பேசிய அவர், நேற்றைய நீதிமன்ற தீர்ப்பு ஓபிஎஸ் அவர்களுக்கு நிச்சயம் பின்னடைவு இல்லை என்று கூறிய அவர், ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அனைத்து அக்கிரமித்துக்கும்  தலைமை கழக மேலாளர் மகாலிங்கம் தான் காரணம் என்றார். மேலும் உயர் நீதிமன்றத்தில் நேற்று அளித்த தீர்ப்பை சுட்டிக்காட்டி பேசிய அவர், உச்ச நீதிமன்றம் செல்லவிருப்பதாகவும், அங்கு வரும் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக தான் தீர்ப்புவரும் என்றார்.

ஓ.பி.எஸ் யாரிடம் அனுமதி கேட்க வேண்டும்:

அதிமுக அலுவலகம் எம்ஜிஆரின் துணைவியார் ஜானகி அவர்களால் அதிமுக கட்சிக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த இடத்தை இன்று இபிஎஸ் தரப்பினர் கொண்டாடி வருவதாக கூறினார். அத்துடன்  ஜெயலலிதா அவர்களால் முதலமைச்சராக்கப்பட்டவர் ஓபிஎஸ். கட்சி அலுவலகத்திற்கு வருவதற்கு அவர் யாரிடம் அனுமதி கேட்க வேண்டும் என்றார்.

பழனிசாமி சிறையில் இருந்து கட்சி நடத்துவாரா?:

கடந்த சில மாதங்களாகவே அதிமுகவில் இருக்கும் அனைத்து முன்னால் அமைச்சர்கள் மீதும் ரெய்டு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி சிறையில் இருந்து கட்சியை நடத்துவாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் போயஸ் தோட்ட இல்லத்திற்கு வந்த தீர்ப்பு போல இந்த வழக்கிற்கும் எங்களுக்கு சாதகமாக தான் தீர்ப்பு வரும் என்று தெரிவித்தார். 

திமுக ஆட்சியை புகழ்ந்த புகழேந்தி:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பற்றி பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு எந்த தகுதியும் கிடையாது. மின் கட்டண உயர்வுக்கு எடப்பாடி பழனிசாமி போராட்டத்தினை அறிவித்திருக்கிறார். ஆனால் அவருடைய ஆட்சியின் செயல்களால் தான் மின் கட்டண உயர்வுக்கு தமிழ்நாடு  தற்போது தள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

மேலும், அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனை எடப்பாடி பழனிசாமி  நியமித்துள்ளார். இது பாலுக்கு பூனையை காவல் வைப்பது போல் உள்ளது, அதிமுக பணத்திற்கு திண்டுக்கல் சீனிவாசனை வைத்துள்ளது என்று விமர்சித்தார். அதுமட்டுமல்லாமல் நடப்பது ஸ்டாலின் ஆட்சி யாரும் தப்ப முடியாது  என்று  திமுக ஆட்சியை அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி பாராட்டி பேசியுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com