தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிக்கும் என்றும் அடுத்த 3 நாட்களுக்கு மேற்கு நோக்கி மெதுவாக நகரக்கூடும் என்றும் கடந்த சில நாட்களுக்கு முன் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில், வருகிற நாளை வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சில மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கனமழை எதிரொலியாக, சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கடலூர், விழுப்புரம், அரியலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.