விளம்பரத்திற்காகவே தனது வீட்டின் முன்பு போராட்டம் நடத்துவதாக விமர்சித்த நடிகை குஷ்பு, சேரி என்ற வார்த்தைக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று ஆணித்தரமாக கூறியுள்ளார்.
பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு "சேரி மொழி" என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கு, பல்வேறு தரப்பில் கண்டனங்கள் எழுந்தன. இதற்கு குஷ்பு மன்னிப்பு கேட்ட வேண்டும் என்ற வாதங்களும் வலுத்து வந்தன. ஆனால் குஷ்பு, "தான் தவறாத எதையும் பேசவில்லை என்றும், சேரி என்பது தவறான வார்த்தை இல்லை " என்றும் விளக்கம் அளித்தார். ஆனால் இதனை ஏற்காத காங்கிரஸ் கட்சியினர், குஷ்பு வீட்டை முற்றுகையிட போவதாக அறிவித்தனர்.
அதன்படி காங்கிரஸ் எஸ்.சி. துறை மாநில தலைவர் ரஞ்சன்குமார் தலைமையில், 100க்கும் மேற்பட்டோர் சென்னை சாந்தோமில் உள்ள நடிகை குஷ்புவின் வீட்டின் முன்பாக திரண்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பெண்கள் மற்றும் வழக்கறிஞர்கள் என பலரும் பங்கேற்று குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். அத்துடன், குஷ்புவின் உருவபடத்தின் மீது சாணத்தை ஊற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பின்னர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பு, விளம்பரத்திற்காக, காங்கிரசார், தனது வீட்டின் முன்பு போராட்டம் நடத்துவதாக கூறியதுடன், மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று திட்டவட்டமாக அறிவித்தார்.