சுமார் 453 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்கள் திறப்பு!

தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் சுமார் 453 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு மாவட்டங்களில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டடங்களை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார். இதன் தொடக்கமாக, பயனாளிகள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின்கீழ், 4 ஆயிரத்து 680 பயனாளிகளுக்கு தலா 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பில் வீடு கட்டுவதற்கான ஆணைகளை வழங்கினார். இதேபோல், கைத்தறி நெசவாளர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு குடியிருப்புகள் ஒதுக்கீட்டு ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார், கிள்ளியூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகக் கட்டடம் மற்றும் தேனியில் கூட்டரங்கம் ஆகியவற்றை காணொலி மூலம் திறந்து வைத்தார். நெய்வேலி என்.எல்.சி., விரிவாக்கத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடத்திற்கான பட்டாக்களையும் அப்போது வழங்கினார்.

இதேபோல், கூட்டுறவுத் துறை சார்பில் 23 கோடியே 35 லட்சம் ரூபாய் செலவில் ஈரோடு, திருச்செங்கோடு, ராசிபுரம், பெருந்துறை ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள கிடங்குகள், சிந்தாதிரிப்பேட்டை மற்றும் தென்மேல்பாக்கம் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள புதிய சங்கக் கட்டடம் உள்ளிட்டவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, துறை சார்ந்த உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com