சென்னை - நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் சேவை...இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர்!

சென்னை - நெல்லை உட்பட 9 வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமா் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கவுள்ளாா். 

இந்திய ரயில்வே, வந்தே பாரத் என்ற பெயரில் நவீன வசதிகளுடன் கூடிய அதிவிரைவு சொகுசு ரயிலை அறிமுகப்படுத்தி இயக்கி வருகிறது. இதில் ஜிபிஎஸ் டிராக்கர், கேமரா, ஒவ்வொரு இருக்கைக்கும் செல்போன் சார்ஜர், தானியங்கி கதவுகள், குளிர்சாதன வசதி என பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. அதிகபட்சமாக மணிக்கு 130 கிலோ மீட்டா் வேகத்தில் இயக்க முடியும் என்பதால், பயண நேரம் குறையும்.

இதனால், இந்த ரயில்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை சென்ட்ரல் - மைசூரு, சென்னை சென்ட்ரல் - கோவை ஆகிய 2 வழித்தடங்கள் உட்பட நாடு முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்கள் இடையே 25-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் சென்னை - நெல்லை இடையே  இன்று முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக இந்த சேவையை தொடங்கி வைக்கவுள்ளாா். இது தென் தமிழகத்தின் முதல் வந்தே பாரத் ரயில் ஆகும். இந்த ரயிலில் 8 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. ரயிலில் பயணிக்க அதிகபட்ச கட்டணமாக ஆயிரத்து 343 ரூபாய் வரை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. உணவுக்கு என 300 ரூபாய் தனி கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. 

நெல்லை - சென்னை இடையே இரு மார்க்கத்திலும் சோதனை ஓட்டம் முடிவடைந்த நிலையில், சென்னையில் இருந்து நாளையும், நெல்லையில் இருந்து 27-ம் தேதியும் வழக்கமான சேவை தொடங்க உள்ளது. இந்த ரயில் நெல்லையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், தாம்பரம் வழியாக மதியம் 1.50 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். மறுமார்க்கத்தில் எழும்பூரில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு நெல்லையை வந்தடையும். செவ்வாய் தவிர மற்ற 6 நாட்களும் ரயில் இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் உதய்பூர் - ஜெய்ப்பூர், ஐதராபாத் - பெங்களூரு உள்ளிட்ட 8 வந்தே பாரத் ரயில் சேவைகளையும் பிரதமா் மோடி தொடங்கி வைக்கவுள்ளாா். 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com