ஒபிஎஸ் ஆதரவாளர்கள் ஏற்றியக் கொடியை இறக்கிய அதிமுகவினர்; மேட்டுப்பாளையத்தில் பரபரப்பு!

Published on
Updated on
1 min read

மேட்டுப்பாளையத்தில் ஓ.பி.எஸ் அணியினர் ஏற்றிய அதிமுக கொடியை இறக்கி கழட்டி எடுத்து சென்ற அதிமுக மாவட்ட செயலாளர். ஓ.பி.எஸ் அணியினர் அதிமுக கொடியை ஏற்ற உரிமையில்லை என வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் மறைந்த பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு ஓபிஎஸ் அணியினர் ஏற்றிய அதிமுக கட்சி கொடியினை அதிமுக வின் கோவை வடக்கு மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர்.ஜி அருண்குமார் நேரில் சென்று அதிமுக  கொடியினை பயன்படுத்த ஓபிஎஸ் அணியினருக்கு எந்த உரிமையுமில்லை என வாக்குவாதம் செய்ததோடு கம்பத்தில் ஏற்றிய கொடியினை இறக்கியுள்ளார். 

மேட்டுப்பாளையம் அரசு போக்குவரத்து கழக  பணிமனை அருகே பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்த நாள் விழாவை கொண்டாடும் வகையில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த கோவை வடக்கு மாவட்ட செயலாளர் சுப்ரீம் இளங்கோ தலைமையிலான குழுவினர் அவரது படத்திற்கு மலர் மாலை சூட்டிதனர். அப்போது அங்கிருந்த கொடி கம்பத்தில் அதிமுக கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தினர். 

இதனையறிந்த இபிஎஸ் ஆதரவாளரும் அதிமுகவின் கோவை வடக்கு மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர்.ஜி அருண்குமார், கோவை மாவட்ட அம்மா பேரவை செயலாளர் நாசர் உள்ளிட்ட அதிமுகவினர் கொடியேற்றி விட்டு நின்று கொண்டிருந்த  ஓபிஎஸ் அணியினரிடம், "நீங்கள் அதிமுக கொடியை ஏற்ற எந்த உரிமையுமில்லை" எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.  மேலும் ஏற்றப்பட்டிருந்த கொடியினை இறக்கியுள்ளார். இதனையறிந்து வந்த மேட்டுப்பாளையம் காவல்துறை அதிகாரிகள் இரு தரப்பையும் சமாதானப்படுத்த முயன்றனர். 

ஆனால், ஓபிஎஸ் தரப்பினர் அண்ணாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது குறித்து எங்களுக்கு ஆட்சேபனையில்லை. ஆனால், சட்டத்திற்கு விரோதமாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் கொடியை ஏற்றுவதையோ, அதனை பயன்படுத்துவதையோ அனுமதிக்க இயலாது என காவல்துறையினரிடம் தெரிவித்தனர். பின்னர் அதிமுக வினர் ஓபிஎஸ் தரப்பில் ஏற்றிய கொடியை இறக்கியதோடு அதனை தாங்களே எடுத்தும் சென்று விட்டனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை செல்லும் நெடுஞ்சாலையோரத்தில் அதிமுக கொடியை ஒரு தரப்பினர் ஏற்றியது மற்றொரு தரப்பினர்  இறக்கியது என காவல்துறையினர் முன்பு வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழலை உருவாக்கியது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com