பேருந்துகளில் நிரம்பி வழியும் மக்கள் கூட்டம்...சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் வருகை அதிகரிப்பு!

பேருந்துகளில் நிரம்பி வழியும் மக்கள் கூட்டம்...சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் வருகை அதிகரிப்பு!

தீபாவளி பண்டிகையொட்டி தென்மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி மக்கள் குடும்பத்துடன் வரதொடங்கியதால் பரனூர் சுங்கச்சாவடியில் வாகனங்களின் வருகை அதிகரித்து காணப்பட்டது. 

களைகட்டிய தீபாவளி பண்டிகை:

தமிழ்நாடு முழுவதும் நேற்று முன் தினம் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதற்காக சென்னை நகரை விட்டு 5 லட்சம் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணித்தனர்.  சொந்த ஊர்களில் குடும்பத்தினருடன் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். இதற்கிடையில், சென்னை மற்றும் பிற ஊர்களில் இருந்து வெளியூர்களுக்கு விடுமுறைக்காக பயணித்தவர்கள் நலன் கருதி, நேற்று ஒரு நாள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அறிவித்தது.

படையெடுக்கும் மக்கள்: 

இந்த நிலையில், இன்று வழக்கம்போல் கல்வி நிலையங்கள் திறக்கப்படுவதால் நேற்று சென்னை புறநகர் பகுதிகளில், தென் மாவட்டங்களில் இருந்து படையெடுத்த வாகனங்களின் வருகை அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக செங்கல்பட்டு, பரனூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கார்கள், வேன்கள், பேருந்துகள், இருசக்கர வாகனங்கள் என வாகன கூட்டம் அலைமோதியது. 

பேருந்துகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்:

அதேபோல் பிற மாவட்டங்களின் பேருந்து நிலையங்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. நெல்லையில், தீபாவளி பண்டிகை முடிந்து வீடு திரும்புபவர்களுக்காக கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்பட்டன. இவற்றில் சொந்த ஊர்களுக்கு பயணிக்க அதிகப்படியான மக்கள் திரண்டனர். இதையடுத்து பேருந்து நிலையத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோல் திருச்சி பேருந்து நிலையத்திலும் ஏராளமான மக்கள் ஊர்களுக்கு செல்ல குவிந்தனர். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com