நம்பிக்கை இழக்காதீர்கள்; வாழ்ந்து காட்டுங்கள்... மாணவர்களுக்கு வைகோ வேண்டுகோள்...

மாணவச் செல்வங்களே நம்பிக்கை இழக்காதீர்கள், வாழ்ந்துக் காட்டுங்கள் என்று வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நம்பிக்கை இழக்காதீர்கள்; வாழ்ந்து காட்டுங்கள்... மாணவர்களுக்கு வைகோ வேண்டுகோள்...

நீட் தேர்வு அச்சம் காரணமாக மாணவர் தனுஷ் தற்கொலை செய்து கொண்ட நிலையில், நேற்று மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (NEET) நடத்துவதில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கக் கோரி, தமிழ்நாடு சட்டப் பேரவையில் சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டு இருக்கின்றது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதியைச் செயல்படுத்த முதல் அடியை எடுத்து வைத்து இருக்கின்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 

கல்வித் துறையில் ஒன்றிய அரசின் ஏகபோக ஆதிக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில், தி.மு.க. அரசு திட்டம் வகுத்துச் செயல்படுவது வரவேற்கத்தக்கது. மாநில அரசுகளின் உரிமைக் குரலை ஓங்கி ஒலிக்கின்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களைப் பாராட்டுகின்றேன்.

நீட் தேர்வை ஒன்றிய அரசு திணித்த நாள்முதல் தமிழ்நாட்டில் 13 மாணவக் கண்மணிகள் தங்கள் உயிர்களைக் போக்கிக் கொண்டுள்ளனர். 

2017 நீட் தேர்வில் வெற்றி பெற முடியாததால், அரிலூர் மாவட்டம், குழுமூரைச் சேர்ந்த அனிதா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்ட துயரம் நாட்டையே உலுக்கியது. அதன் பிறகு தொடர்ச்சியாக, செஞ்சியை அடுத்த பெரவளூர் பிரதீபா, திருச்சி சுபஸ்ரீ, சென்னை சேலையூரைச் சேர்ந்த ஏஞ்சலின் சுருதி, திருப்பூர் ரிது ஸ்ரீ, மரக்காணம் கூனிமேடு மோனிசா, பட்டுக்கோட்டை வைஸ்யா, நெல்லை தனலட்சுமி, கோவை ஆர்.எஸ்.புரம் சுப ஸ்ரீ, மதுரை ஜோதி ஸ்ரீ துர்கா, செந்துறை விக்னேஷ், தருமபுரி ஆதித்யா, திருச்செங்கோடு மோதிலால் ஆகியோர் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்டனர்.

மேட்டூரை அடுத்த கூலையூரைச் சேர்ந்த மாணவன் தனுஷ் இருமுறை நீட் எழுதி தோல்வி அடைந்ததால் மீண்டும் தேர்வில் வெற்றிபெற முடியாமல் போகுமோ என்ற மன உளைச்சலில் நேற்று முந்தைய நாள் தற்கொலை செய்து கொண்டார்.

12 ஆம் தேதி நீட் தேர்வை எழுதிய அரியலூர் மாவட்டம் துலாரங்குறிச்சி எனும் ஊரைச் சேர்ந்த வழக்கறிஞர் கருணாநிதி என்பவரின் மகள் கனிமொழி, நீட் தேர்வு தோல்வி அச்சத்தால் நேற்று மாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் என்ற மரணச் செய்தி நெஞ்சைப் பிளக்கின்றது. ஒன்றிய பா.ஜ.க. அரசின் அதிகார ஆணவ எதேச்சதிகாரத்தால் புகுத்தப்பட்ட நீட் நுழைவுத் தேர்வால் தமிழ்நாடு 15 மாணவச் செல்வங்களைப் பறி கொடுத்து விட்டது.

இன்னும் உயிர்களைக் காவு கொடுக்க தமிழ்நாடு ஆயத்தமாக இல்லை என்பதை டெல்லிக்கு உணர்த்துவதற்காகத்தான், நீட் தேர்வு கூடாது என்று சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டு இருக்கின்றது. இந்திய அரசு அமைப்புச் சட்டத்தில் பொதுப்பட்டியலின் கீழ் உள்ள கல்வித்துறையில், மாநில நலனுக்காக சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு இருக்கின்றது. அந்த அடிப்படையில்தான் தமிழ்நாடு சட்டமன்றத்தில் சட்ட முன்வடிவு நிறைவேறி உள்ளது. 

அரியலூர் மாணவி அனிதா தொடங்கி. அதே அரியலூர் மாணவி கனிமொழி வரையில் தமிழ்நாடு நீட் தேர்வுக்காக உயிர்ப்பலி கொடுத்தது போதும். இனியும் இந்நிலை தொடர இடம் தரக் கூடாது. எனவே, ஒன்றிய பா.ஜ.க. அரசு, தமிழ்நாடு அரசு நிறைவேற்றி உள்ள சட்ட முன்வடிவுக்குத் தாமதம் இன்றி  ஏற்பு அளித்து, நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும்.

நீட் எழுதிய மாணவ செல்வங்கள், எதிர்நீச்சல் போட்டு, வாழத் துணிய வேண்டும். நம்பிக்கை இழக்கக் கூடாது. உங்கள் உயிர்களைப் போக்கிக் கொண்டால், பெற்றோரும், உற்றாரும் எத்தகைய இழப்புக்கு உள்ளாவர்கள் என்பதை எண்ணிப் பாருங்கள். வாழ்நாள் முழுவதும் கண்ணீர் விடுவார்கள். 

சமூகத்திற்கும், நாட்டிற்கும், வீட்டிற்கும் நீங்கள் ஆற்ற வேண்டிய பெரும் பணிகள் நிரம்ப இருக்கின்றன என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் எனக் வேண்டிக் கேட்டுக் கொள்கின்றேன் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com