இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உயிரிழந்த திமுக தொண்டனுக்கு வைகோ இரங்கல்...

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உயிரிழந்த திமுக தொண்டனுக்கு வைகோ இரங்கல்...

சேலம் மாவட்டம், நங்கவள்ளி பகுதியில் உள்ள தாழையூர் கிராமத்தைச் சேர்ந்த திமுக விவசாய அணியின் முன்னாள் ஒன்றியப் பொறுப்பாளரான தங்கவேல் என்பவர் ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பு நடவடிக்கைகளை தாள முடியாமல் நேற்று காலையில் தி.மு.கழக அலுவலகத்திற்கு முன்பாக தீக்குளித்து மாண்டார் என்ற செய்தி கேட்டு பெரிதும் அதிர்ச்சியும் ஆராத் துயரமும் கொண்டேன் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தி ஆதிக்கத்தினை எதிர்த்து கீழப்பழுவூர் சின்னச்சாமியை பற்றி உயிர் குடித்த தீ, இன்று தங்கவேல் அவர்களின் உயிரையும் பறித்தெடுத்த கொடுமையை எவ்வாறு தாங்கிக்கொள்வது, ஒன்றிய பா.ஜ.க. அரசு இவைகளை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு தமிழ் மக்களின் உணர்வுகளை மதித்து நடக்குமா? இந்தித் திணிப்பை, சமஸ்கிருத மொழி திணிப்பை நாள்தோறும் செய்து வருவதை நிறுத்திக்கொள்ளுமா? என்ற உணர்வு தமிழ் மக்களின் நெஞ்சில் தணலாய் கொதித்து எழுகிறது.

அன்னைத் தமிழ் மொழியைக் காப்பதற்காக ஆதிக்கம் செலுத்தி வரும் இந்தி, சமஸ்கிருத மொழிகளின் வல்லாதிக்கத்தை நிறுத்துவதற்காக தீக்குளித்து தன் மூச்சை நிறுத்திக்கொண்ட அந்தத் தியாக மறவன் தங்கவேல் அவர்களுக்கு என் வீர வணக்கத்தை தெரிவித்து, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.கழக தலைவருமான மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் “ஏற்கனவே ஏராளமான தீரர்களை நாம் இழந்துவிட்டோம். இனி ஒரு உயிரையும் நாம் இழக்கக் கூடாது. போராட்ட வடிவமாக இன்னுயிரை இழக்கும் செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்” என்று மனம் நெகிழ்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையை நான் வழிமொழிகிறேன்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com