மசோதா தாக்கல் காரணமாக பிட்காயின் விலை சரிவு.!!

கிரிப்டோகரன்சி தொடர்பான ஒழுங்குமுறை மசோதாவை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், டிஜிட்டல் கரன்சியான பிட்காயின் விலை  திடீரென சரிந்துள்ளது.

மசோதா தாக்கல் காரணமாக பிட்காயின் விலை சரிவு.!!

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, முதலீட்டாளர்கள் புதுவித முதலீடுக்கான வழிகளை கண்டறிந்து வருகின்றனர். ஒரு காலத்தில் தங்கம், டாலர் என முதலீடு செய்து வந்தவர்களும் தற்போது கிரிப்டோ கரன்சி என்ற மெய்நிகர் நாணயம் பக்கம் திரும்பியுள்ளனர்.

உலகளவில் பெரும்பாலானோர்,  கிரிப்டோகரன்சி என்ற டிஜிட்டல் பரிவர்த்தனை முறையை பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் இவ்வகை பணபரிவர்த்தனையில் அரசாங்கத்தின் தலையீடு இருக்காது என்பதுடன், இது உலகெங்கும் பயன்படுத்தும் ஒரே கரன்சியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மெய்நிகர் நாணயங்களான பிட்காயின், ஈத்தரியம், டெதர் ஆகியவற்றை ஒருசில நாடுகளே அங்கீகரித்துள்ளன. ஆனால் மெய் நிகர் நாணயத்தை சிலர் சட்டவிரோதமாக பயன்படுத்தி போதைப்பொருள் உள்ளிட்டவற்றை வாங்கி குற்றச்செயலில் ஈடுபடுகின்றனர். 

இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து, அதுகுறித்து பாஜக தலைவர் ஜெயந்த் சின்ஹா தலைமையிலான நாடாளுமன்ற குழு ஆலோசனை நடத்தியது. அதன் நன்மைகள், தீமைகள் ஆராயப்பட்ட நிலையில், கிரிப்டோ கரன்சியை தடை செய்ய முடியாது, மாறாக ஒழுங்குமுறைப்படுத்துவது அவசியம் என அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, வருகிற 29ம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கிரிப்டோ கரன்சி முறையை ஒழுங்குமுறை படுத்துவதற்கான மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மசோதா அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கரன்சியை உருவாக்கவும், தனியார் கிரிப்டோ கரன்சிகளுக்கு தடைவிதிக்கவும் வழிவகை செய்யும் என கூறப்படுகிறது. 
 
இதனிடையே கிரிப்டோ கரன்சி தொடர்பான மசோதா தாக்கல் விவரம் வெளியானதும்,  டிஜிட்டல் கரன்சிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக பிட்காயின் விலை 18 புள்ளி 53 சதவீதம் சரிந்துள்ளது.

இதேபோல் ஈதெரியம் 15 புள்ளி 58 சதவீதமும், டெதர் 18 புள்ளி 29 சதவீதமும் சரிந்துள்ளது. நேற்று மாலை, பிட்காயின் விலை மட்டும் சுமார் 41 கோடி ரூபாய் சரிந்ததாக நியூயார்க்கில் உள்ள பிரபல கிரிப்டோ கரன்சி வலைதளம் குறிப்பிட்டுள்ளது.