நெல்லையில் ருசீகர சம்பவம்...தங்களது பள்ளிக்காக மாணவர் சேர்க்கையில் களமிறங்கிய முன்னாள் மாணவர்கள்!

நெல்லையில் ருசீகர சம்பவம்...தங்களது பள்ளிக்காக மாணவர் சேர்க்கையில் களமிறங்கிய முன்னாள் மாணவர்கள்!
Published on
Updated on
1 min read

நெல்லை மாவட்டம் பேட்டையில், அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில், முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து மக்களுக்கு துண்டுபிரசுரம் விநியோகித்தனர்.


அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை என்பது குறைந்து வருவதால் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்குமாறும் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தியும் வருகிறது. 

இதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாவட்டத்தில் பேட்டையில் இயங்கி வரும் காமராஜர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 -ம் வகுப்பு வரை உள்ள நிலையில், இந்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை துரிதப்படுத்தவும், அதிகப்படுத்தவும் பள்ளி ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த நிலையில், ஆசிரியர்களுக்கு உறுதுணையாக இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து, சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு வீடு வீடாக சென்று அரசுப் பள்ளியில் சேர்ந்தால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர். இந்த செயல் கல்வியாளர்களிடையே பெரும் ஆச்சரியத்தையே ஏற்படுத்தியுள்ளது.

வழக்கமாக, முன்னாள் மாணவர்கள் என்றால் நேரம் கிடைக்கும் போது பள்ளியில் அலுமினி நிகழ்ச்சி ஏற்படுத்தி தங்களுடன் பயின்ற அனைவரையும் சந்தித்து விழா நடத்தி கொள்வார்கள். ஆனால் பேட்டை காமராஜர் அரசு பள்ளியை சேர்ந்த முன்னாள் மாணவர்கள், வித்தியாசமான முறையில் தாங்கள் படித்த பள்ளி மேலும் வளம் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு மாணவர் சேர்க்கையில் களமிறங்கி வீடு வீடாக துண்டுப் பிரசுரம் வழங்கியது கல்வியாளர்கள் இடையே பாராட்டை பெற்றுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com