“முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து.. ” - 2026-ம் ஆண்டுக்கு டைம் ட்ராவல் செய்த விஜய் ரசிகர்கள்.. !

“முதல்வர் விஜய்க்கு  பிரதமர் மோடி வாழ்த்து.. ” - 2026-ம் ஆண்டுக்கு டைம் ட்ராவல் செய்த  விஜய் ரசிகர்கள்.. !

மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் ஒன்று இணையத்தில் படு வைரலாகி வருகிறது.   

மதுரை மாவட்டத்தில் முக்கிய இடத்தில் நடிகர் விஜய்க்கு ஆதரவாக ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் ஒன்றுதான் இன்றைக்கு சமூகவலைதளங்களில் கடும் வைரலாகி வருகிறது. விஜய்யின் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் அக்டோபர் 19-ம் தேதியன்று வெளியாக உள்ள நிலையில்   ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர். 

அதன் வெளிப்பாடாய் சொல்லப்போனால் ஒரு கட்டத்துக்கு மேலே போய் டைம் ட்ராவலே செய்துள்ளனர் தளபதி வெறியர்கள். 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடந்தால், அந்த தேர்தலில் விஜய் நின்றால், எப்படி இருக்கும் என்ற கற்பனையை கண் முன்பு காண்பித்துள்ளனர். 

சட்டமன்றத் தேர்தலில் விஜய் வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்பது போலவும், அதற்கு பிரதமர் மோடி நேரில் வந்து பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வது போலவும் ரகளையை தொடங்கியுள்ளனர். 

அதிலும் 2026 ஏப்ரல் 12-ம் தேதியன்று ஞாயிற்றுக்கிழமையன்று தான் இந்த சம்பவம் நடக்க விருப்பதாகவும், மத்தியில் மோடியின் நல்லாட்சி, மாநிலத்தில் விஜய்யின் மக்களாட்சி என மக்களே பேசுவதாக போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர். 

அட இதைக் கூட ஜீரணித்துக் கொள்ளலாம். ஆனால் முதல் பக்கத்தில் இடம் பெற்ற புகைப்படத்தில் விஜய்க்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அ.ம.மு.க. தலைவர் டி.டி.வி. தினகரன், த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், ஓ.பன்னீர்செல்வம் என அனைவருமே நேரில் சென்று பொன்னடை போர்த்துவது போன்ற புகைப்படம் நெட்டிசன்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்துள்ளது. 

2026-ம் ஆண்டுக்கு டைம் ட்ராவல் ஆன விஜய் ரசிகர்கள் அப்போதும் இந்தியாவின் பிரதமராக மோடிதான் இருப்பார் என்பதை சூசகமாக சொல்லியிருக்கிறாரோ? என எண்ண வைத்துள்ளது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com