ஐரோப்பிய நாடுகள் புறக்கணித்தால்... கிழக்குப் பகுதி நாடுகளுக்கு எரிவாயு திருப்பப்படும் - அதிபர் புதின்

ஐரோப்பிய நாடுகள் புறக்கணித்தால், லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட கிழக்குப் பகுதி நாடுகளுக்கு ரஷ்யாவின் எரிசக்தி ஆற்றல் திருப்பி விடப்படும் என்று அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகள் புறக்கணித்தால்... கிழக்குப் பகுதி நாடுகளுக்கு எரிவாயு  திருப்பப்படும் - அதிபர் புதின்

உக்ரைன் தாக்குதலையடுத்து ரஷ்யா மீது ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடைகளை தொடர்ந்து அமல்படுத்தி வருகின்றன.

6-வது கட்ட தடைகளில் ரஷ்யாவின் எரிவாயுவை கொண்டு வருவதற்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ஐரோப்பிய நாடுகளுக்குள் இந்த விவகாரத்தில் கருத்து வேறுபாடு நிலவுவதால் முடிவெடுப்பதில் சிறிது காலதாமதம் ஆகலாம் என்று தெரிகிறது.

இந்தநிலையில், ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பே, ரஷ்ய எரிவாயுவை ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகள் உள்ளிட்ட கிழக்குப் பகுதிக்கு மடைமாற்றம் செய்ய புதின் முடிவு செய்துள்ளார்.

மாஸ்கோவில் நடைபெற்ற அரசு அதிகாரிகள் கூட்டத்தில் பேசிய அவர், இதற்கான  உள்கட்டமைப்பைக் கட்டியெழுப்புவதற்கான பணிகளைத்  தொடங்க உத்தரவிட்டுள்ளார்.

மேற்கு மற்றும் கிழக்கு சைபீரியாவில் உள்ள ஹைட்ரோகார்பன் வயல்களில் இருந்து புதிய எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய்களை அமைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். பொருளாதாரத் தடைகளை உடைக்கும் விதமாக பல்வேறு எதிர் நடவடிக்கைகளை புதின் தொடர்ந்து மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.