முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை பயணம்...!

பசும்பொன் முத்துராமலிங்க தேவா் குருபூஜை விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை செல்லவுள்ளாா். 

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழா ஆண்டு தோறும் அக்டோபர் 30-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் நடைபெறும். திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்பட பெரும்பாலான அரசியல் கட்சி தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவார்கள். 

அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவில் பங்கேற்க நாளை பசும்பொன் செல்கிறார். இதற்காக சென்னையில் இருந்து இன்று மாலை விமானம் மூலம் மதுரை சென்றடைகிறார். மதுரையில் இன்று இரவு தங்கும் முதலமைச்சர் நாளை காலை மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

அதன் பின்னா் காரில் பசும்பொன் கிராமத்திற்கு புறப்பட்டு சென்று முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்துகிறார். அவருடன் அமைச்சர்களும் மரியாதை செலுத்தவுள்ளனா். நிகழ்ச்சிகள் முடிவடைந்ததும் சென்னை புறப்பட்டு செல்கிறாா். முதலமைச்சர் மதுரைக்கு வருவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com