தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்...!

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் மீது குண்டர் சட்டம் பிரயோகித்ததைக் கண்டித்து  மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா என்ற இடத்தில் சிப்காட் அமைக்க நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் ஏழு பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில் விவசாயிகள் மீது குண்டர் சட்டம் பிரயோகித்ததைக் கண்டித்து பல்வேறு மாவட்டங்களில் விவசாய அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் பல்வேறு விவசாய அமைப்புகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருவண்ணாமலை விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்று அப்போது  வலியுறுத்தப்பட்டது.

தஞ்சாவூரில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் போராட்டக்குழு சார்பில் பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க நினைக்கும் அமைச்சர் எ.வ.வேலு, மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என  வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிறையில் உள்ள விவசாயிகளை விடுதலை செய்ய கோரியும், நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023-ஐ  திரும்ப பெறக் கோரியும் வலியுறுத்தி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். 

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

இந்த போராட்டங்கள் வாயிலாக விடுக்கும் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அடுத்த கட்டமாக மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம் என்று விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com