" இன்னும் எத்தனை மரணங்களுக்கு திமுக காரணமாகப்போகிறது...? " - சீமான் கேள்வி.

" இன்னும் எத்தனை மரணங்களுக்கு திமுக காரணமாகப்போகிறது...? " -  சீமான் கேள்வி.
Published on
Updated on
2 min read

தமிழிளம் தலைமுறையை முழுவதுமாக பலி கொடுக்கும் முன்பாக தமிழ்நாடு அரசு மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

" வேலூரைச் சேர்ந்த பதினாறே வயதான அன்புமகள் விஷ்ணுபிரியா தனது தந்தையின் குடிப்பழக்கத்தால் சீரழியும் குடும்பத்தின் நிலைகண்டு, மனம் வெறுத்து தற்கொலை செய்துகொண்டுள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. மலிவுவிலை மதுக்கடை என்ற பெயரில் தமிழ்க்குடும்பங்களை சிறுக சிறுக சீரழிக்கும் தமிழ்நாடு அரசின் மனச்சான்றற்ற கொடுஞ்செயல் வன்மையான கண்டனத்துக்குரியது ".

" கடந்த அதிமுக ஆட்சியின்போது தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கினை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று போராடிய திமுக, ஆட்சிக்கு வந்தவுடன் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தாமல் தொடர்ந்து ஏமாற்றி வருவது தமிழிளம் தலைமுறைக்குச் செய்கின்ற பச்சைத் துரோகமாகும்". 

" பெண்களுக்கு இலவசப் பேருந்து, குடும்பத் தலைவிகளுக்கு உதவித்தொகை என்று பெண்களின் மேம்பாட்டிற்குப் பல திட்டங்களை நடைமுறைப்படுத்துவதாகக் கூறும் திமுக அரசு, பல இலட்சக்கணக்கான தமிழ்ப்பெண்களின் வாழ்க்கையை நாசப்படுத்தி, அவர்களின் கண்ணீருக்கு காரணமான மதுக்கடைகளையும் தொடர்ந்து நடத்துவது ஏன்? மகள் விஷ்ணுபிரியா போன்று இலட்சக்கணக்கான பெண் குழந்தைகளின் குடும்பங்களைச் சீரழிக்கும் டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு, பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதாக திமுக அரசு பெருமைகொள்வது எவ்வகையில் அறமாகும்? ."

" கடந்த 2018ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தின்போது சங்கரன்கோவிலைச் சேர்ந்த 17 வயதான அன்புமகன் தினேஷ் தந்தையின் குடிப்பழக்கத்தால் தினம் தினம் சீரழியும் குடும்பத்தின் நிலைகண்டு மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தற்கொலை செய்து கொண்டார். ஆனால் சிறிதும் இரக்கமற்ற அதிமுக அரசு அக்குழந்தையின் மரணத்தை அன்றைக்கு அலட்சியப்படுத்தி மதுக்கடைகளை மூட மறுத்தது" . 

" அதன்பிறகு 2021ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் மதுவினால் தமிழ்க்குடும்பங்கள் சீரழியும் கோரக்காட்சிகள் மட்டும் இன்றுவரை நின்றபாடில்லை. இந்த ஆண்டு சனவரி மாதம் ஈரோடு கிழக்கு தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் அன்புபிள்ளைகள் கார்த்தி மற்றும் கௌதம் ஆகிய இரு சகோதரர்களும், குடி போதையிலிருந்த தன் சொந்த தாய்மாமனாலேயே குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். மதுக்கடைகளை மூட மறுத்து தினேஷ், கார்த்தி, கௌதம் தற்போது விஷ்ணுபிரியா போன்று இன்னும் எத்தனை இளம்பிள்ளைகளின் மரணத்திற்கு திராவிட அரசுகள் காரணமாகப்போகிறது? ".

" கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்களை முற்றிலுமாக ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு, கொடிய போதைப்பொருளான மதுவினை அரசே விற்பது எவ்வகையில் நியாயமாகும்? கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் உறவினர்களை ஓடோடி நேரில் சென்று பார்த்து, 10 இலட்ச ரூபாய் நிதியுதவி வழங்கிய திமுக அரசு, தான் விற்கும் மதுவினால் நிகழ்ந்துள்ள குழந்தைகளின் மரணங்கள் குறித்து வாய் திறவாமல் அமைதி காப்பது ஏன்? மதுபோதையினால் நடைபெறும் கொலைகளாலும், சாலை விபத்துகளாலும் நாள்தோறும் பறிபோகும் உயிர்களுக்கு திமுக அரசு என்ன பதில் கூறப்போகிறது? அல்லது இதுவும் இந்தியாவே வியக்கும் திராவிட மாடல் அரசின் சாதனைகளா? என்பதை திமுக அரசுதான் தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும்".

" ஆகவே, திமுக அரசு அன்புமகள் விஷ்ணுபிரியா போன்று இனியும் தமிழிளம் தலைமுறை பிள்ளைகளை பலி கொள்வதைக் கைவிட்டு, உடனடியாக அனைத்து மதுக்கடைகளையும் நிரந்தரமாக மூடி, தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்".

" அன்புமகள் விஷ்ணுபிரியாவை இழந்து தவிக்கும் அவரது தாய், தந்தையருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து, இப்பெருந்துயரத்தில் பங்கெடுப்பதோடு, விஷ்ணுபிரியாவின் தந்தை இனியேனும் இக்கொடிய குடிப்பழக்கத்தைக் கைவிட்டு, தமது அன்பு மகளின் இறுதி ஆசையை நிறைவேற்ற வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்" .

இவ்வாறு அவர் தனது அறிக்கையில்  குறிப்பிட்டிருந்தார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com