”தமிழ்நாடு பள்ளி மாணவர்கள் விவகாரத்தில் நடந்தது தவறுதான்” - அமைச்சர் அன்பில் மகேஷ்!

”தமிழ்நாடு பள்ளி மாணவர்கள் விவகாரத்தில் நடந்தது தவறுதான்” - அமைச்சர் அன்பில் மகேஷ்!

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாடு பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ள முடியாத சூழலை ஏற்படுத்தியது தவறுதான் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெறவுள்ள பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளில், தமிழக அணி சார்பில் இதுவரை விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்படவில்லை. இதனால் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழக வீரர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கடந்த 5 தேதி செய்திகள் வெளியானது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், உடனடியாக தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தமிழக அணியைத் தேர்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாடு பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ள முடியாத சூழலை ஏற்படுத்தியது தவறுதான். அந்த தவறை ஒப்புக்கொள்கிறோம், முறையான தகவல் பரிமாற்றம் இல்லாததன் காரணமாகவே மாணவர்கள் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாத சூழல் உருவாகி உள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்த விவகாரத்தில் தவறு செய்த உடற்கல்வியல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், மேலும் இணை இயக்குனர் ஒருவரிடமும் இது சார்ந்த விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும்  கூறியவர், வரும் ஆண்டில் நடைபெற உள்ள தேசிய அளவிலான பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டியில் தமிழக மாணவர்கள் நிச்சயம் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கூறினார்.

முன்னதாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள செய்தியில், விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு தமிழக மாணவர்களை புறக்கணித்த விவகாரத்தில் முதன்மை மாநில உடற்கல்வி ஆய்வாளர் மீது கண்துடைப்பு நடவடிக்கை எடுத்து, தான் பணியில் இழைத்த தவறை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மறைக்கப் பார்ப்பதாகவும், அமைச்சரின் பொறுப்பின்மையை மறைக்க, அரசு அதிகாரிகளைப் பலிகடாவாக்கி, தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் பிரகாசிக்கும் கனவுடன் இருந்த பள்ளி மாணவர்களின் கனவுகளைக் கலைத்திருப்பது நியாயமா? என்றும்,  பள்ளிக் கல்வித் துறை அமைச்சரே இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும் எனவும் விமர்சித்திருந்தார்.  

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com