”அமைச்சர் பொன்முடி எங்களை அவமதிக்கவில்லை” - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தங்களுக்கு இருக்கை வழங்காமல் அவமதிக்கவில்லை இது தற்செயலாக நடந்த சம்பவம் என ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர் புஷ்பராஜ் விளக்கமளித்துள்ளார். 

கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக மாநில ஆதிதிராவிட நலக்குழு மற்றும் சிறுபான்மை நல உரிமைக்குழு பிரிவு மத்திய மண்டலம் சார்பாக வருகின்ற ஞாயிறு காலை விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் பட்டிமன்றம் நடைபெற உள்ளது, ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளை பெற்றுத் தந்தது கலைஞரின் அரசியல் பணியா? கலை இலக்கிய பணியா? என்ற தலைப்பில் நடுவர் திண்டுக்கல் லியோனி தலைமையில் இந்த பட்டிமன்றம் நடைபெற உள்ளது.

இந்த பட்டிமன்றத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் எ வா வேலு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே எஸ் செஞ்சி மஸ்தான், கழக துணை பொது செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அந்தியூர் செல்வராஜ், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சிவி கணேசன், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா, சிறுபான்மை நல உரிமை குழு மாநில தலைவர் சுபேதார்கான் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் மற்றும் முக்கிய நபர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளனர்.

மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணைச் செயலாளரும் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம சிகாமணி இந்த பட்டிமன்றத்தை துவக்கி வைக்கிறார். ஆதி திராவிடர் நல குழு செயலாளர் மற்றும் பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினருமான ஆர் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர்கள் ராமலிங்கம், புஷ்பராஜ், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினரும் விழுப்புரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் புகழேந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர். 

இந்த நிகழ்ச்சி தொடர்பாக நேற்று முன் தினம் காலை உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடியின்  விழுப்புரம் இல்லத்தில் ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான விபி இராசன் அமைச்சர் பொன்முடியுடன் கலைஞர் நூற்றாண்டு விழா குறித்து விழா பத்திரிகையை வழங்கி விழா குறித்து ஆலோசனை மேற்கொண்டு வந்த பொழுது, அமைச்சர் பொன்முடி இருக்கையில் அமர்ந்தபடியும் பத்திரிக்கை வழங்க சென்ற முன்னாள் எம்எல்ஏ    வி.பி.  இராசன், ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர் புஷ்பராஜ் உள்ளிட்டவர்கள் உட்கார நாற்காலிகள் வழங்கப்படாமல் அமைச்சர் முன்பு குனிந்து நின்று இருந்த புகைபடம் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக இன்று மாலை கலைஞர் அறிவாலயத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான புஷ்பராஜ் இந்த சம்பவம் குறித்து கூறுகையில்:-

“நானும் ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வி.பி இராசன் அவர்களும், அமைச்சர் பொன்முடியை அவரது இல்லத்தில் சந்திக்க சென்ற பொழுது உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடிக்கு காலில் லேசான காயம் இருந்த காரணத்தால் அவர் காலில் மருந்து தடவிக் கொண்டு அப்படியே வெளியில் வந்து எங்களை சந்தித்தார். 

அவரிடம் விபி ராசன் உடல்நலம் குறித்து  விசாரித்தபோது பிபி ராஜன் மகனால் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இந்த புகைப்படம் இதில் எந்த சர்ச்சையும் இல்லை, அவர் எங்களுக்கு இருக்கை வழங்காமல் அவமதிக்கவில்லை.

இது தற்செயலாக நடந்த சம்பவம். அதன் பின்பு நாங்கள் ஒன்றாக இருக்கையில் அமர்ந்து பேசிவிட்டு அமைச்சரின் இல்லத்தில் உணவருந்தி விட்டு தான் அங்கிருந்து கிளம்பிச் சென்றோம்”,  என விளக்கம் அளித்து பேட்டி அளித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com