வீடுகள் மீது விழும் மர்ம கற்கள் : டிரோன் மூலம் கண்காணிக்கும் மக்கள்...

காங்கேயம் அருகே இரவில் வீடுகள் மீது மர்மமான முறையில் கற்கள் விழுவதால் கிராம மக்கள் பீதியின் உச்சத்திற்கே சென்று கோயிலில் தஞ்சம் அடைந்துள்ளனர். டிரோன் கேமராவை பயன்படுத்தி கற்கள் எவ்வாறு விழுகிறது என்பதை கண்காணிக்கும் விநோதம் பற்றி இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
வீடுகள் மீது விழும் மர்ம கற்கள் : டிரோன் மூலம் கண்காணிக்கும் மக்கள்...
Published on
Updated on
2 min read

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே ஒட்டபாளையம் கிராமத்திலுள்ள 80க்கும் மேற்பட்ட வீடுகள் மீது கடந்த சில நாட்களாக மர்மமான முறையில் கற்கள் விழுவதாக கூறப்படுகிறது. மாலை 6 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை தொடர்ச்சியாக கற்கள் விழுவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

திடீர் திடீரென கற்கள் விழுவதால் பதறிப்போன கிராம மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இருப்பினும் கற்கள் விழுவதற்கான காரணத்தை கண்டறிய முடியாததால் குட்டி சாத்தான் போன்ற அமானுஷ்ய சக்திகளை யாரேனும் ஏவி விட்டுள்ளார்களா என்றும் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

ஊர் மக்கள் ஒன்றுகூடி கற்களை யாரேனும் வீசுகிறார்களா? என்று கண்டுபிடிக்க இரவு நேரத்தில் காவல் காக்க முடிவு செய்தனர். சந்தேகப்படும்படி யாரும் சிக்காத நிலையில், வீடுகள் மீது கற்கள் விழுவது மட்டும் தொடர் கதையாக இருந்து வருகிறது.

இதனால் தூக்கத்தை இழந்து தவித்து வரும் கிராம மக்கள் இரவில் வீட்டில் தனியாக இருக்க பயந்து அருகிலுள்ள கருப்பண்ணசாமி கோயிலில் தஞ்சம் அடைகின்றனர். மேலும் ஒரு சிலர் கிராமத்தை விட்டு வெளியேறி விடலாம் என்ற எண்ணத்திலும் உள்ளனர்.

இந்த புரியாத புதிருக்கு விடை தேட எண்ணிய கிராம மக்கள் பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தியும், டிரோன் மூலம் கண்காணித்தும் வருகின்றனர்.

மேலும் ஊருக்கு நடுவே ராட்சத கிரேனின் உதவியுடன் 60 அடி உயரத்தில் ஆட்களை நிறுத்தியும் கற்கள் விழுவதற்கான காரணத்தை கண்டறிய முடியாமல் கிராம மக்களும், அரசு அதிகாரிகளும் குழம்பியுள்ளனர்.

இவ்வளவு கண்காணிப்புகளையும் தாண்டி தொடர்ந்து 7 மணி நேரம் கிராமத்திலுள்ள அனைத்து வீடுகள் மீதும் கற்களை வீசுவது மனித சக்திக்கு அப்பாற்பட்ட செயல் என்பதால் விண்ணில் இருந்து கற்கள் விழுகிறதா? என்ற சந்தேகமும் ஒட்டபாளையம் பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com