ஓபி. ரவீந்திரநாத் வழக்கு: மேல்முறையீட்டுக்காக 30 நாட்கள் தீர்ப்பு ஒத்திவைப்பு...!

ஓபி. ரவீந்திரநாத்  வழக்கு:  மேல்முறையீட்டுக்காக 30 நாட்கள் தீர்ப்பு ஒத்திவைப்பு...!
Published on
Updated on
2 min read

தேனி மக்களவை தொகுதி எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் குமார் வெற்றியை செல்லாது என அறிவித்த சென்னை உயர்நீதிமன்றம், மேல்முறையீடு செல்ல ஏதுவாக 30 நாட்கள் உத்தரவை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.


கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவை பொதுத் தேர்தலில், தேனி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் போட்டியிட்டு 76 ஆயிரத்து 319 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். 

இந்நிலையில், இவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக் கோரி அந்த தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அதில், ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ரவீந்திரநாத் குமார் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாகவும், பணம் பட்டுவாடா அதிகம் நடப்பதாக வேலூர் தொகுதி தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தேனி தொகுதியிலும் அதிக பணப்பட்டுவாடா நடந்தும், தேர்தலை தள்ளிவைக்கவில்லை என்று கூறியிருந்தார். 

இந்த தேர்தல் வழக்கை ஏற்கக்கூடாது என ரவீந்திரநாத் குமாரின் நிராகரிப்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன்பு நடைபெற்ற விசாரணையின்போது, ஏற்கனவே மூன்று நாட்கள் நேரில் ஆஜரான ரவீந்திரநாத் குமார், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து சாட்சியம் அளித்தார். அவரை தொடர்ந்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். 

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து தீர்ப்பு தேதிகுறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், வழக்கு தொடர்பாக சில விளக்கங்களை நீதிபதி கேட்டிருந்தார். அது தொடர்பாக ஆவணங்களை சமர்பிக்க தயாராக இருப்பதாக ரவீந்திரநாத் குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு,தன் தரப்பு விளக்கத்தை கேட்கவேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. அதை நீதிபதி ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில், ரவீந்திரநாத்குமார் கடந்த வாரம் நேரில் ஆஜராகி கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்தார். அப்போது அவர் தரப்பு மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் தெரிவித்த கேள்விகளுக்கு, சாட்சி கூண்டில் ஏறி ஆங்கிலம் மற்றும் தமிழில் தனது வாக்குமூலத்தை அளித்தார். பின்னர் மனுதாரர் மிலானி தரப்பு வழக்கறிஞர் வி. அருண் நடத்திய குறுக்கு விசாரணைக்கும் பதிலளித்தார்.

அதிகார துஷ்பிரயோகம், ஆவணங்களில் திருத்தம், சொத்துகள் முறையாக காட்டாதது, பணப்பரிமாற்றம் போன்ற குற்றச்சாட்டுகள் ஆகியவற்றை மறுத்து மூன்றரை மணி நேரத்திற்கு மேலாக நின்றபடியே விளக்கம் அளித்தார். இதையடுத்து இரு தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களுக்கு பிறகு வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர், ஓ.பி.ஆர் வேட்புமனுவில் சொத்துகளின் விவரம், வங்கி கடன், வைப்பு தொகை மூலமாக பெற்ற வட்டி விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை எனவும், முழுமையாக பூர்த்தி செய்யப்படாத வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி ஏற்றது செல்லாது போன்ற காரணங்களால் ரவீந்திர நாத்தின் வெற்றியை செல்லாது என அறிவித்து தீர்ப்பு வழங்கினார்.

இதையடுத்து இந்த தீர்ப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதால் 30 நாட்கள் தீர்ப்பை நிறுத்தி வைக்கக்கோரி ஓ.பி.ரவீந்திரநாத் தரப்பில் கோரிக்கை வைக்கப்ட்டது. ஓ.பி.ஆர். தரப்பின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி தீர்ப்பை 30 நாட்கள் நிறுத்திவைத்து உத்தரவிட்டார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com