சென்னை கமிஷனராக அருண் ஐபிஎஸ் நியமனம்... யார் இந்த அருண் ஐ.பி.எஸ்?

சென்னையின் கமிஷனராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, புதிய காவல் ஆணையராக அருண் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் இந்த அதிரடி முடிவுக்கு காரணம் என்ன? பொறுப்பேற்றிருக்கும் அருண் நிகழ்த்திய சாதனைகள் என்ன? விரிவாக பார்க்கலாம்...
சென்னை கமிஷனராக அருண் ஐபிஎஸ் நியமனம்... யார் இந்த அருண் ஐ.பி.எஸ்?

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் அரசியல் கொலைகள் பெருகியதால் தமிழக எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருகின்றன.

இந்நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து சென்னையின் புதிய கமிஷனராக ஏ.டி.ஜி.பி. அருண் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை பல்கலைக்கழக்கத்தில் பி.இ. மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்த அருண், உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் காவல்துறை மேலாண்மை பிரிவில் பட்டயப் படிப்பு முடித்தார்.

1998-ல் ஐ.பி.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்ற அருண், நாங்குநேரியில் முதல் பணியை தொடங்கியர், தூத்துக்குடி மாவட்டத்தின் உதவி கமிஷனரானார்.

கன்னியாகுமரி, திருப்பூர், கருர் ஆகிய மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி பின்னர் சென்னை அண்ணா நகர் மற்றும் பரங்கிமலை ஆகிய இடங்களில் துணை ஆணையராக பணியாற்றினார்.

2011-ம் ஆண்டு காவல்துறை டிஐஜியாக பதவி உயர்வு பெற்று திருச்சி சரக காவல் துணைத் தலைவரானார். இதையடுத்து சென்னை மாநகரின் போக்குவரத்து வடக்கு மண்டலம் மற்றும் சட்டம் - ஒழுஙகு தெற்கு மண்டலத்தின் இணைய ஆணையராகவும் பொறுப்பேற்றார்.

கடந்த 2016-ம் ஆண்டு காவல்துறை ஐ.ஜி.யாக பதவி பெற்று 2021-ம் ஆண்டு இரண்டாவது முறையாக திருச்சி மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றார். அப்போது திருச்சியில் லாட்டரி விற்பனைக்கு எதிராக அதிரடி நடவடிக்கையில் இறங்கிய அருண், முக்கிய குற்றவாளிகளை கூண்டோடு பிடித்தார்.

பின்னர் 2022-ம் ஆண்டு கூடுதல் டி.ஜி-பி.யாக பதவி உயர்வு பெற்று ஆவடி மாநகர காவல் ஆணையராக பணியாற்றினார். சில மாதங்களுக்கு முன்பு போலீசாருக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்திருந்தார் அருண்.

அதாவது, காவல்துறையினர், நிலம், வீடு, வாடகை உள்ளிட்ட சிவில் பிரச்னைகளில் தலையிடக்கூடாது என அறிவுறுத்தினார். எப்.ஐ.ஆர்., சி.எஸ்.ஆர். மற்றும் நீதிமன்ற வழிகாட்டுதல்கள் இல்லாமல் எந்த மனுக்கள் மீதும் காவல்துறை விசாரணை நடத்தக்கூடாது என்றும், அவ்வாறு ஒப்புதல் இன்றி விசாரித்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுற்றறிக்கை மூலமாக எச்சரித்திருந்தார்.

அதே போல போலீஸ் என போலியான ஸ்ட்டிக்கர்களை பைக், கார்களில் ஒட்டுபவர்களுக்கும் கடும் எச்சரிக்கை விடுத்தார். அதோடு கடந்த ஆண்டு சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக பொறுப்பேற்றார்.

கடந்த வருடம் ஜூலையில் கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பரபரப்புக்குள்ளான நிலையில், விஜயகுமார், அதிக பணிச்சுமையின் காரணமாக தற்கொலை செய்ததாக பரபரப்புத்தீயை கட்டுக்குள் கொண்டு வந்தவர் அருண்.

இவ்வாறு காவல்துறையில் பல்வேறு இடங்களுக்கு மாறுதல் உண்டாகி, பம்பரமாய் சுற்றி வந்த அருண் தற்போது சென்னை மாநகரின் 110-வது கமிஷனராக பதவி உயர்வு பெற்றுள்ளார். மேலும் சட்டம் ஒழுங்கு புதிய ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பதவியேற்ற பின்பு செய்தியாளர்களை சந்தித்த அருண், தமிழ்நாட்டில் ரவுடிகளை ஒழிப்பதே தனது முதல் பணியாக இருக்கும் என தெரிவித்தார்.

சென்னையில் பணிபுரிவது தமக்கு ஒன்றும் புதிதல்ல என கூறியவர், ரவுடிகளுக்கு எந்த மொழி புரியுமோ, அந்த மொழியில் நிச்சயம் புரிய வைப்பேன் என்றும் கடுமையாக எச்சரித்துள்ளார்.

இதுவரை கமிஷனர் பொறுப்பில் இருந்த சந்தீப் ராய ரத்தோர், காவலர் பயிற்சி கல்லூரியின் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் சமீப காலமாக ரவுடிகள் அட்டகாசம் பெருகி வருவதாலும், முக்கியப் புள்ளிகள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டு வருவதாலும், இத்தகைய மாற்றம் நிகழ்ந்திருப்பதாக காவல்துறை வட்டாரம் தெரிவிக்கின்றன.

தற்போது பொறுப்பேற்றிருக்கும் புதிய கமிஷனராவது ரவுடியிசத்துக்கு முடிவுரை எழுதுவாரா? போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தை கட்டுப்படுத்துவாரா? தமிழ்நாடு, குறிப்பாக தலைநகர் சென்னை அமைதிப் பூங்காவாக மாறுமா? பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com