பிள்ளைகளை கூட்டத்தில் விட்டு விட்டு தப்பியோடிய தாய்...

பிள்ளைகளை கூட்டத்தில் விட்டு விட்டு தப்பியோடிய தாய்...

சாப்பாடு வாங்கி வருவார் என காத்திருந்த குழந்தைகள்

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அவுலி தர்கா அமைந்துள்ளது. இங்கு ஜூன் 20-ம் தேதியன்று சிறப்பு தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொழுகை முடித்து அனைவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது 6 வயது சிறுமியும், 3 வயது சிறுவனும் வெகுநேரமாக அங்கேயே அமர்ந்திருந்தனர். இதனை கண்ட அங்கிருந்தவர்கள் குழந்தைகளிடம் விவரங்களைக் கேட்டறிந்தனர்.

தங்களை அழைத்து வந்த தாய், இங்கு அமருமாறு கூறி , சாப்பாடு வாங்கி விட்டு வருவதாக சென்றதாகவும், ஆனால் விரைவில் வருவதாய் சென்ற தாயார் வெகுநேரமாகியும் வரவே இல்லை என்றும் அழுது கொண்டே கூறினர் அந்த பிஞ்சுகள்.

இது பற்றிய தகவல் அறிந்த பண்ருட்டி போலீசார் நேரில் சென்று குழந்தைகள் இருவரையும் மீட்டு கடலூர் குழந்தைகள் நல காப்பகத்திற்க்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் பெற்ற தாயே தனது இரண்டு குழந்தைகளையும் வேண்டுமென்றே கூட்டத்தில் விட்டு தப்பியோடியது தெரியவந்தது. மேலும் தப்பியோடிய பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தங்கள் தாய் வந்து அழைத்துச் செல்வார் என காத்திருந்த குழந்தைகள் கண்ணீர் மல்க நின்ற காட்சிகள், அங்கிருந்தவர்களை உள்ளம் உருகச் செய்தது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com