12 மணி நேர வேலை சட்டம்...!! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்...!!

12 மணி நேர வேலை சட்டம்...!! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்...!!

தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 21ஆம் தேதி நிறைவடைந்த நிதிநிலை அறிக்கை கூட்டதொடரின் இறுதியில், தொழிலாளர்களின் வேலை நேரத்தை நீட்டிக்கும் விதமாக 'தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்த) சட்டம் -2023 சட்ட முன் வரைவு' தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசனால் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது திமுகவின் கூட்டணி கட்சிகளான விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக, மனித நேய மக்கள் கட்சி போன்றவை இச்சட்ட மசோதாவிற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தன. கூட்டணி கட்சிகளின் எதிப்பையும் மீறி இம்மசோதா சட்டப் பேரவையில் நிறைவேறியது. Image

இந்நிலையில் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தும் இந்த சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் செல்வா தலைமையில் சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்கா முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் செல்வா, 12 மணி நேர வேலை என்ற இந்த சட்ட மசோதாவை நிறைவேற்றியதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எள்ளளவும் ஏற்கவில்லை எனக் கூறிய அவர் இதில் 6 விதிகளில் திருத்தம் கொண்டு வந்துள்ளனர் எனவும் வேலை நேரம் மட்டுமல்லாமல், விடுப்பு எடுப்பதற்கான உரிமை, எவ்வளவு நேரம் வேலை செய்தால் கூடுதல் ஊதியம் கிடைக்கும் போன்றவை பற்றி தெளிவாக எதுவும் குறிப்பிடவில்லை எனவும் கூறினார். Image

மேலும், 12 மணி நேரம் வேலை செய்தால் மூன்று நாள் விடுமுறை என்று தவறான தகவலை தமிழ்நாட்டு அரசு தறுவதாகவும் முற்போக்கான அரசியலில் இருக்கக்கூடிய மாநிலத்தில் திமுக அரசு இப்படியான சட்டங்களை நிறைவேற்றுவது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது எனவும் கூறியுள்ளார்.

தொடர்ந்து, மே தின பூங்கா என்பது முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி இருக்கும்போது எட்டு மணி நேர வேலைக்காக போராடி உயிர் நீத்தவர்களுக்காக திறந்து வைத்தாக கூறிய அவர்  எட்டு மணி நேர வேலையை 6 மணி நேரமாக குறைக்க வேண்டும் என்று குரல் கொடுத்தவரும் கலைஞர் கருணாநிதி தான் என சுட்டிக்காட்டினார்.

அப்படி இருக்கையில் பன்னாட்டு முதலாளிகள் தமிழ்நாட்டு மக்களின் உழைப்பை சுரண்டுகிற வகையில் சட்டம் கொண்டு வருவதை எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியும் என கேள்வி எழுப்பிய அவர்தமிழ்நாடு அரசு இந்த சட்டத்தை முழுமையாக திரும்ப பெற வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். தொழில்துறை அமைச்சர் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஆகியோர் இந்த சட்டத்தில் இருக்கக்கூடிய பாதகங்களை குறித்து பேசவில்லை  எனவும் 48 மணி நேர வேலை செய்தால் 3 நாள் விடுப்பு என்பதெல்லாம் இந்த சட்டத்தில் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.  

ஏற்கனவே தமிழ்நாட்டில் செவிலியர்கள், மருத்துவர்கள் போக்குவரத்து ஊழியர்கள், மின்சாரதுறை ஊழியர்கள் போக்குவரத்து துறையில் ஓய்வு பெற்ற ஊழியர்கள், மாநகராட்சியில் வேலை செய்யக்கூடிய தூய்மை பணியாளர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் என பலரும் போராடி வருவதை சுட்டிக்காட்டிய அவர் இவர்களுடைய போராட்டத்தை அரசாங்கம் காது கொடுத்து கேட்காமல் முதலாளிகள் சொல்வதை  மட்டும் கேட்பேன் என இந்த சட்டத்தை கொண்டு வந்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.