மின்வாரிய தொழிற்சங்கங்களுடன் 2 - வது கட்ட பேச்சுவார்த்தை...!

மின்வாரிய தொழிற்சங்கங்களுடன் 2 - வது கட்ட பேச்சுவார்த்தை...!
Published on
Updated on
1 min read

மின்வாரிய தொழிற்சங்கங்களுடன் நடைபெற்ற இரண்டாவது கட்ட முத்தரப்பு சமரச பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியில் முடிந்தது. 

சென்னை தொழிலாளர் நல ஆணையரகத்தில் மின்வாரிய தொழிற்சங்கங்களுக்கும் - மின்வாரிய அதிகாரிகளுக்கும் முத்தரப்பு சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. 01-12-2019 அன்று போடவேண்டிய ஊதிய உயர்வு தொடர்பான ஒப்பந்தம், 56 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும், அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும், ரீ டிப்ளாய்மெண்ட் முறையை கைவிட வேண்டும், பிபி நம்பர் இரண்டு ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் வருகிற 10 ஆம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக குறிப்பிட்டு இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து கடந்த மூன்றாம் தேதி தொழிலாளர் ஆணையரகத்தில் தொழிலாளர் நல துணை ஆணையர் ரமேஷ் குமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையில் அரசு தரப்பில் இருந்து தொழிற்சங்கங்களுக்கு வழங்க எந்தவித உத்தரவாத கடிதங்கள் கொண்டு வராத காரணத்தினால் அன்றைய தின பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.

தொடர்ந்து இன்று தொழிலாளர் நல துணை ஆணையர் ரமேஷ் குமார் தலைமையில் மீண்டும் இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தையானது நடைபெற்றது. இந்த பேச்சு வார்த்தையில் அரசு தரப்பில் மின்வாரிய தலைமை பொறியாளர் (பணி அமைப்பு) சார்பாக மொழியரசியும் மின்வாரிய துணைச் செயலாளர் டெல்லி ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிஐடியு உள்ளிட்ட 11 தொழிற்சங்கங்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் அரசு தரப்பில் இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமித்து ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையை மேற்கொள்ளலாம் என தொழிலாளர் நல துணை ஆணையரிடம் தெரிவிக்கப்பட்டது. இதனை தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்தது. இதனால் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவுற்றது. ஏற்கனவே ஏழு பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த கமிட்டியின் மூலமாக மட்டுமே இந்த பேச்சு வார்த்தை நடைபெற வேண்டும் எனவும் தொழிற்சங்கங்கள் கேட்டுக் கொண்டது. அதை விடுத்து புதிதாக இரண்டு அதிகாரிகள் நியமிப்பதை தொழிற்சங்கங்கள் எதிர்கின்றன.

தொழிலாளர் நல ஆணையரகம் 9 ஆம் தேதி அரசு தரப்பில் அமைக்கப்படும். இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தையை மேற்கொள்ள தொழிற்சங்கங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com