கர்நாடக அணைகளிலிருந்து 5000 கன அடி காவிரி நீர் திறப்பு... டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி!!

கர்நாடக அணைகளிலிருந்து 5000 கன அடி காவிரி நீர் திறப்பு... டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி!!

கர்நாடகாவில் பல்வேறு பகுதிகளிலும் மழை தீவிரமடைந்துள்ள நிலையில், நடப்பு ஆண்டில் முதல்முறையாகக் கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை இதுவரை தீவிரமாகப் பெய்யத் தொடங்கவில்லை. மழை தீவிரமடையாததால் மேட்டூர் அணை தண்ணீர் நம்பி குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். இதற்கிடையில், கர்நாடகாவில் உள்ள அணைகளில் நீர் இருப்பு உயர்ந்துள்ள போதிலும், தமிழ்நாட்டிற்குக் கொடுக்க வேண்டிய நீரைக் கர்நாடக அரசு கொடுக்க மறுத்து வந்தது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீர் அளவு 150 அடியாகச் சரிந்திருந்தது. 

இதையடுத்து, தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய நீரைக் கர்நாடகா உடனடியாக தர வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. மேலும், இது தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் டெல்லி சென்று வலியுறுத்தினார்.  

இந்த நிலையில், தற்போது கர்நாடகாவில் மழை அளவு உயர்ந்துள்ளதை அடுத்து, அணைகளில் இருந்து, முதற்கட்டமாக 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 2 ஆயிரத்து 487 கன அடி நீரும், கபினி அணையில் இருந்து 2 ஆயிரத்து 500 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் காவிரி ஆற்றில் 5 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். நீர் வரத்து அதிகரித்ததன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இதன் மூலம் வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுவதால், டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.