சிறுமியை சகட்டுமேணிக்கு தாக்கிய மாடு... வைரலான வீடியோ...உரிமையாளர் மீது வழக்கு!

சிறுமியை சகட்டுமேணிக்கு தாக்கிய மாடு... வைரலான வீடியோ...உரிமையாளர் மீது வழக்கு!
Published on
Updated on
1 min read

சென்னை, அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலணி பகுதியில் பள்ளி சென்றுவிட்டு திரும்பிய சிறுமியை மாடுகள் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், மாட்டின் உரிமையாளர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. 

சென்னை, அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலணி பகுதியில் ஆர்.பிளாக் இளங்கோ தெரு பகுதியில் 4ம் வகுப்பு படித்து வரும் சிறுமி நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பி உள்ளார். அப்போது, அந்த சிறுமி இளங்கோ தெரு பகுதி வழியாக வந்துக் கொண்டிருக்கும் போது, அருகே வந்த மாடு ஒன்று சிறுமியை சகட்டுமேணிக்கு மோதி புரட்டி எடுத்தது. அப்போது அங்கிருந்தவர்கள் மாட்டின் மீது கற்களை வீசியும் விடாத மாடு சிறுமியை பயங்கரமாக தாக்கியது. இதனால் காயமடைந்த, சிறுமியை மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் சென்றனர்.

இதனையடுத்து இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக மாட்டின் உரிமையாளர் விவேக் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அரும்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், சிறுமியை முட்டி தள்ளிய இரண்டு மாடுகளையும் சென்னை மாநகராட்சி சுகாதார துறை ஊழியர்கள் பிடித்து சென்றனர்.

இதனிடையே, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்த போதிலும், இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருவதால் அதற்கான தண்டனையை அதிகப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில் சிறுமியை மாடு முட்டிய சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, மாட்டின் உரிமையாளர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணர் தெரிவித்தார். அத்துடன் சிறுமியை முட்டிய இரண்டு மாடுகளையும் பிடித்து பெரம்பூரில் உள்ள மாநகராட்சி தொழுவத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும், பொது வெளியில் திரியும் மாடுகளை பிடிக்கவும், அடைத்து வைக்கவும் மாநகராட்சி சார்பில்  தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். 

மேலும், பொது இடங்களில் மாடுகளை திரிய விடும் உரிமையாளர்களுக்கு 2000 ரூ வரை அபராதம் விதிக்கப்படுவதாகவும், பொது இடங்களில் மாடுகள் சுற்றி திரிவதை கட்டுப்படுத்தவும், தொடர்ந்து கண்காணிக்கவும் கால்நடை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com