காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்க மறுத்தால்...! தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை...!! 

காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்க மறுத்தால்...! தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை...!! 

முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நோயாளிகளை சிகிச்சைக்கு அனுமதிக்காத தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சட்டப்பேரவையில், கேள்வி நேரத்தில் போது கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெயசீலன், கூடலூர் மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பிரிவுக்கு கட்டிடம் கட்ட அரசு முன்வருமா ? எனவும், முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அனுமதிக்க இரண்டு மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாகவும், ஆண்டு வருமானத்தை அடிப்படையாக கொண்டு முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகள் சிலர் நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை சேர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 40 லட்சம் பேர் பயனடைந்து வருவதாகவும், சிகிச்சைக்கான எண்ணிக்கை 900-லிருந்து 1513 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், ஆண்டு வருமானம் அதிமுக ஆட்சியில் 70 ஆயிரம் இருந்ததாகவும் திமுக ஆட்சியில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சைக்கு அனுமதிக்காத தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்தார்.