மக்களவை கூடிய 5வது நிமிடத்திலேயே ஒத்திவைப்பு...!

மக்களவை கூடிய 5வது நிமிடத்திலேயே ஒத்திவைப்பு...!

லண்டனில் ராகுல்காந்தி பேசிய விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மக்களவையும், மாநிலங்களவையும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ம் அமர்வின் 3ம் நாள் கூட்டம் இன்று டெல்லியில் தொடங்கியது. முன்னதாக அதானி விவகாரம் குறித்து எழுப்பப்பட வேண்டிய கேள்விகள் தொடர்பாக மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் எதிர்கட்சிகள் ஆலோசனையில் ஈடுபட்டன. எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை உயர்வு தொடர்பாக திரிணாமூல் காங்கிரஸ் எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தின் காந்திசிலை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிக்க : வரும் 17 ஆம் தேதி...உடல் பரிசோதனை மருத்துவ முகாமை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்!

இதையடுத்து மக்களவை கூடிய நிலையில், இந்தியாவில் ஜனநாயகம் கேள்விக்குறியாகியுள்ளது என லண்டனில் ராகுல்காந்தி பேசியது தொடர்பாக பாஜக அமைச்சர்களும் எம்பிக்களும் கோஷமெழுப்பினர். அவைக்கு முன்சென்று பதாகைகளுடன் சென்ற நிலையில், எதிர்கட்சி எம்பிக்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அவை கூடிய ஐந்தாவது நிமிடத்திலேயே மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையில் அதானி விவகாரம் தொடர்பாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டிய நிலையில், ஆளுங்கட்சியினர் ராகுல் பேச்சை சாடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து மாநிலங்களவையும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் அறிவித்தார்.