அணைகளை மூடிய கர்நாடகம்; அன்புமணி இராமதாஸ் கண்டனம்!

அணைகளை மூடிய கர்நாடகம்; அன்புமணி இராமதாஸ் கண்டனம்!

காவிரியில் உரிய நீரை வழங்காமல் கர்நாடகம் நிறுத்தியதற்கு எதிராக பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டிற்கு காவிரியில் திறக்கப்படும் தண்ணீரை கர்நாடக அரசு முற்றிலுமாக நிறுத்தி விட்டதால்,  மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை 3,000 கன அடி என்ற அளவில் குறைந்து விட்டது. மேட்டூர் அணையில் உள்ள தண்ணீரைக் கொண்டு குறுவை பாசனத்திற்காக ஒரு வாரத்திற்கு கூட தண்ணீர் திறக்க இயலாது என்பதால், குறுவை நெற்பயிர்கள் கருகும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் இதனை கண்டித்து பாமக தலைவர் இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில்,

மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 3421 கன அடியாக குறைந்துவிட்டது. மேட்டூர் அணையின் நீர் இருப்பும் 53.70 அடியாக, அதாவது 20 டி.எம்.சியாக குறைந்து விட்டது. குடிநீர் உள்ளிட்ட குறைந்தபட்ச தேவைகளுக்காக 15 டி.எம்.சி தண்ணீரையாவது இருப்பு வைக்க வேண்டும் என்பதால், அது போக மீதமுள்ள 5 டி.எம். சியைக் கொண்டு அடுத்த ஒரு வாரத்திற்கு கூட குறுவை பாசனத்திற்காக தண்ணீரைத் திறக்க முடியாது என தெரிவித்துள்ளார். 

மேலும், காவிரி பாசனப் படுகையில் அறுவடைக்கு முந்தைய நிலையை அடைந்துள்ள குறுவை பயிர்களைக் காப்பாற்ற ஒரு நாளைக்கு ஒரு டி.எம்.சி வீதம் அடுத்த 40 நாட்களுக்கு 40 டி.எம்.சி தண்ணீராவது தேவைப்படுகிறது. ஆனால், கர்நாடக அரசோ, காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பையும், உச்சநீதிமன்றத்தின்  தீர்ப்பையும் மதிக்காமல் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மறுத்து வருகிறது என கூறியுள்ளார். 

இந்நிலையில் கர்நாடகத்திடமிருந்து காவிரியில் உடனடியாக தண்ணீர் பெறவில்லை என்றால், காவிரி படுகையில் கருகும் பயிர்களைக் காப்பாற்ற முடியாது என தெரிவித்துள்ள அன்புமணி, கர்நாடகத்திடமிருந்து தண்ணீர் பெறுவதற்காக நமக்குள்ள ஒரே வாய்ப்பு நாளை நடைபெறவிருக்கும் காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவின் கூட்டம் தான் எனவும் கூறியுள்ளார். மேலும், காவிரி பாசன மாவட்டங்களில் நிலவும் சூழல் குறித்தும், கடந்த காலங்களில் கர்நாடக அரசு உரிய அளவில் தண்ணீர் திறக்காதது குறித்தும் காவிரி நீர் ஒழுங்குமுறை குழு கூட்டத்தில் எடுத்துரைத்து தமிழ்நாட்டிற்கு தேவையான தண்ணீரை பெறுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படிக்க:"போலி சான்றிதழ்களால், தகுதியானவர்களுக்கு உரிமை கிடைக்கவில்லை" உயர்நீதிமன்றம் வேதனை!