ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடத்தில் கலைஞர்...!!

ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடத்தில் கலைஞர்...!!
Published on
Updated on
1 min read

இந்த கல்வி ஆண்டு முதல் ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடத்தில் கலைஞரை பற்றிய பாடம் இடம்பெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சட்டப் பேரவையில் அறிவித்துள்ளார்.

இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் கேள்வி நேரத்தின்போது அதிமுகவின் விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கரின் கேள்விக்கு பதிலளிக்கும் முன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

வழக்கம் போல தனது பேச்சை சுவாரஸியமாக தொடங்கிய பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "ஓடி வந்த இந்தி பெண்ணே கேள் நீ தேடி வந்த கோழை நாடு இதுவல்லவே'' என்ற கருணாநிதியின் வசனத்தை குறிப்பிட்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி தன்னுடைய 13 வது வயதில் போர் பாவை பாடி, 86வது வயதில் தமிழுக்கு செம்மொழி என்ற அந்தஸ்தை பெற்று தந்ததாக கூறிப் பெருமிதமடைந்தார். 

கலைஞரின் நூற்றாண்டு நிறைவை ஒட்டி, அவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டைப் போற்றும் வகையில், பணியை குறிக்கும் விதத்தில் இந்த கல்வி ஆண்டு முதல் ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் அவரைப் பற்றிய பாடம் இடம் பெற இருப்பதாக தெரிவித்தார்.

பின்னர், விராலிமலை தொகுதி அன்னவாசல் பேரூராட்சியில் உள்ள அரசினர் பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட அரசு ஆவண செய்யுமா என சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் எழுப்பிய கேள்விக்கு விடையளித்த அவர், சட்ட விதிகளுக்கு உட்பட்டு அன்னவாசலில் உள்ள அந்த பள்ளிக்கு இடம் வழங்க முடியவில்லை எனவும் பயன்பாடற்ற காவல் நிலைய குடியிருப்பு மற்றும் பொதுப்பணித்துறை சாலையாக இருப்பதாலும் பள்ளிக்கு இடம் வழங்க ஏற்றதாக இல்லை எனவும் பதிலளித்தார்.

எனவே பள்ளிக்கு கட்டிடம் கட்ட வருவாய் துறையால் இடம் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் இடம் தேர்வு செய்யப்பட்டவுடன் நபார்டு திட்டம் அல்லது பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் மூலமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய கட்டிடம் கட்ட ஆவன செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com