சென்னை வாசிகள் கவனத்திற்கு...! தி-நகரில் விரைவில் வரப்போகும் ஆகாய நடைபாதை..!

இந்தியாவிலேயே நீளமான உயர்மட்ட நடை பாதையாக.......
சென்னை வாசிகள் கவனத்திற்கு...! தி-நகரில் விரைவில் வரப்போகும் ஆகாய  நடைபாதை..!

சென்னை வாசிகளின் ஷாப்பிங் ஹப்...ஒரு நாளைக்கு பல கோடி ரூபாய் வர்த்தகம் செய்யப்படும் இடம்...ஹார்ட் ஆப் தி சிட்டி... என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுவது சென்னை தியாகராய நகர். 

சென்னை தொடங்கி வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து துணி மற்றும் நகை வாங்குவதற்காக ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.  இதனால் எப்போதும் பரபரப்பாகவும், மக்கள் கூட்டத்துடனும் காணப்படும் சென்னை தியாகராய நகரில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ஆகாய நடை பதை திட்டம் தொடங்கப்பட்டது. சுமார் 28 கோடியே 45 லட்சம் ரூபாய் செலவில், 2018-ம் ஆண்டு இந்த ஆகாய நடை பாதை திட்டம் தொடங்கப்பட்டது.  

அதாவது,  தியாகராய நகர் பேருந்து நிலையத்தையும் மாம்பலம் ரயில் நிலையத்தையும் இணைக்கும் இந்த ஆகாய நடைபாதையானது, ரங்கநாதன் தெரு, மேட்லி சாலை, மார்க்கெட் சாலை, நடேசன் தெரு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவுகிறது. அத்துடன் பாதசாரிகள் வாகன இடையூறுகள் இல்லாமல் நடந்து செல்லவும் வழி வகுக்கிறது. 

மேலும், இந்தியாவிலேயே நீளமான உயர்மட்ட நடை பாதையாக அமைக்கப்பட்டுள்ள இந்த பாதை 4.20 மீட்டர் அகலமும் 570 மீட்டர் நீளமும் கொண்டுள்ளது. அதோடு, பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடனும், நவீன தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. மேம்பாலத்தின் இரண்டு புறமும் , 8 முதல் 10 பேர் வரை செல்லும், மின் தூக்கி அமைக்கப்பட்டிருக்கிறது. 

மேலும், தியாகராய நகர் பேருந்து நிலையத்திலிருந்து மேம்பாலத்திற்கு வருவோருக்கு நகரும் படிக்கட்டுகள் மற்றும், மக்கள் அச்சமின்றி செல்லும் வகையில் மேம்பாலம் முழுவதும் வண்ண விளக்குகளும் , 24 மணி நேர கண்காணிப்புடன் சிசிடிவி கேமராக்கள், ஒப்பனை அறை, தீயணைப்பான் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக துணை மேயர் மகேஷ் குமார் தெரிவிக்கிறார்.

ஆகாய நடை பாதை அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது குறிப்பிடத் தக்கது. 

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com